ஆர்.கே.நகரில் 145 பேர் மனு தாக்கல் மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் மனுக்கள் ஏற்பு


ஆர்.கே.நகரில் 145 பேர் மனு தாக்கல்  மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் மனுக்கள் ஏற்பு
x
தினத்தந்தி 5 Dec 2017 1:15 PM IST (Updated: 5 Dec 2017 1:05 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 145 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுசூதனன், மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் மனுக்கள் ஏற்கபட்டது.

சென்னை, 

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு  தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர்  மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நேற்று மதியம் திடீரென புற்றீசல் போல சுயேட்சை  வேட்பாளர்கள் படையெடுத்து  வந்தனர். தண்டையார்பேட்டையில் உள்ள தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வந்ததால் சலசலப்பும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவர்களை உட்கார வைக்க முடியாத அளவுக்கு இட நெருக்கடி ஏற்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் திரண்டதால் தேர்தல் அதிகாரிகளும்,  போலீசாரும் திணறினார்கள். இதைத் தொடர்ந்து மனுதாக்கல் செய்ய வந்தவர்களின் பெயர்களை குறித்துக் கொண்டு டோக்கன் போன்று வரிசை எண்களை கொடுத்தனர்.அந்த சமயத்தில் நடிகர் விஷால், ஜெ.தீபா மனு தாக்கல் செய்ய வந்தனர். அவர்களும் சுயேட்சைகள் தான் என்பதால் அவர்கள் முன்னதாக மனுதாக்கல் செய்யும் வகையில் சலுகைகள் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் விஷாலுக்கு 68-வது எண்ணும், ஜெ.தீபாவுக்கு 91-வது எண்ணும் வழங்கப்பட்டது.

மதியம் 3 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக கதவு மூடப்பட்டது. பிறகு பதிவு எண் வரிசைப்படி ஒவ்வொருவராக அழைக்கப் பட்டு   வேட்புமனுக்கள் பெறப்பட்டன.   நடிகர் விஷால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

வேட்புமனுக்கள் அனைத்தையும் வாங்கி முடிக்க இரவு 9.45 மணியாகி விட்டது. அதன்பிறகு   மொத்தம் எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று கணக்கிடப்பட்டது. 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது இரவு 10 மணிக்கு தெரிய வந்தது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 115 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரே நாளில் இவ்வளவு சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தது சாதனையாக கருதப்படுகிறது.

அதுவும்   சுயேட்சை வேட்பாளர்கள்  விதம், விதமாக வந்து  தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர். கடைசி நிமிடத்தில் இவ்வளவு சுயேட்சைகள் வந்ததில் அரசியல் சூழ்ச்சி பின்னணியாக இருக்கலாம் என்று அரசியல்  வட்டாரத்தில் பேசப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு வேட்பாளரை திணற வைக்கவே சுயேட்சைகள் களம் இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து நடிகர் விஷால் உள்ளிட்ட சுயேட்சைகளின் மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இன்று பிற்பகல் 4 மணியுடன் மனுக்கள் பரிசீலனை நிறைவு பெறுகிறது.

Next Story