சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ; 63 பேர் போட்டியிட்டால் ஒப்புகைச்சீட்டு கிடையாது - தேர்தல் ஆணையம்


சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ; 63 பேர் போட்டியிட்டால்  ஒப்புகைச்சீட்டு கிடையாது - தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 5 Dec 2017 3:38 PM IST (Updated: 5 Dec 2017 3:38 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம். 63 பேருக்கு மேல் போட்டியிட்டால் ஒப்புகைச்சீட்டு கிடையாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு  தாக்கல் கடந்த 27-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட் பாளர்  மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் கடந்த 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். அன்று மாலை வரை 30 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் கடைசி நாளான நேற்று மேலும் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மட்டும் 145 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்து. அதுவும்   சுயேட்சை வேட்பாளர்கள்  விதம், விதமாக வந்து  தேர்தல் அலுவலக அதிகாரிகளை திணற வைத்து விட்டனர்.  இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. முதலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோர் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் படிவம் B-ல் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கையெழுத்திட்டுள்ளதாக தகவல்

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் மற்றும் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனுக்கள் ஏற்கபட்டது. விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்க அ.தி.முகவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன.  இதை தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடிக்கிறது.

இது வரை 30 வேட்பாளர்களின் மனு நிராகரிக்கபட்டு உள்ளது. இன்று பிற்பகல் 4 மணியுடன் மனுக்கள் பரிசீலனை நிறைவு பெறுகிறது நாளை மறுநாள் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

தேர்தல் அதிகாரிகள் கூறும் போது :- சுயேட்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்படும் .ஆர்.கே.நகரில் 63க்கும் மேற்பட்டோர் போட்டியிட்டால் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படாது.

தொப்பி சின்னத்தை பதிவு செய்த கட்சிகள் கேட்டால் முன்னுரிமை தரப்படும். என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story