எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் 5 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் செல்போன் திருட்டு
சென்னை சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் கடந்த 5 நாட்களில் 70-க்கும் மேற்பட்ட பயணிகளிடம் இருந்து செல்போன்கள் திருடப்பட்டு உள்ளன.
சென்னை,
நாகர்கோவில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 36) இவர் நேற்று சென்னை எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு வந்து ‘கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் நாகர்கோவில் செல்வதற்காக எழும்பூர் ரெயில் நிலையம் வந்தேன். எனது இருக்கையில் அமர்ந்து செல்போனை பார்த்தபோது காணவில்லை’ என்று புகார் தெரிவித்தார்.
இதேபோல், சென்னையை சேர்ந்த ராஜேந்திரபாபு என்பவரும் ரெயில்வே போலீசாரிடம் தனது செல்போனை காணவில்லை என்று புகார் கூறினார். மேலும் ஒரே ரெயிலில் வந்த 3 பயணிகள் தனது செல்போனை காணவில்லை என்று அடுத்தடுத்து புகார் அளித்தனர்.
இதுகுறித்து ரெயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
2 பேர் பிடிபட்டனர்
டிசம்பர் மாதம் தொடங்கி 5 நாட்களே ஆகி உள்ள நிலையில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் மட்டும் செல்போன் காணவில்லை என்று பயணிகளிடம் இருந்து 33 புகார்கள் வந்துள்ளன. விசாரணையில் 5-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக தற்போது 2 சிறுவர்களை பிடித்து உள்ளோம். அவர்கள் மூலமாக மற்றவர்களை பிடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட செல்போன்கள் திருடு போனதாக பயணிகளிடம் இருந்து புகார் கள் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story