மணல் குவாரி : கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததை அரசு திரும்பப் பெற டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
மணல் குவாரிகளை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆற்று மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூடவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு அளித்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
புயல் நிவாரணப் பணிகள் முடிவடையாத நிலையிலும் அவசர, அவசரமாக மேல்முறையீடு செய்யுமாறு அரசு அழுத்தம் கொடுத்ததற்கு என்ன காரணம்?.
ஐகோர்ட்டு அனுமதி
தமிழகத்தில் தேவையான அளவுக்கு உற்பத்தி மணல் ஆலைகளை அமைக்கவும், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தரமான ஆற்று மணலை இறக்குமதி செய்யவும் ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதை செய்வதன் மூலம் இப்போது கிடைப்பதைவிட குறைவான விலையில் தரமான மணல் கிடைக்கும். அதனால் இது ஒரு பிரச்சினை இல்லை. அப்படியானால் வேறு என்ன காரணம்?.
மணல் கொள்ளையும், அதனால் ஆளுங்கட்சியினருக்கு கிடைக்கும் வருமானமும் தடைப்பட்டு விடுமே என்ற கவலை தான் காரணமாக இருக்க முடியும். இதை இழக்க மனமில்லாமல் தான் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் அவசர, அவசரமாக மேல்முறையீடு செய்துள்ளனர். இது தான் உண்மை.
திரும்பப்பெற வேண்டும்
ஆறுகளில் விதிகளை மீறி மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீர் வளத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள தீமைகள் அளவிட முடியாதவை. தனிமனிதர்கள், ஊழல்வாதிகள், மணல் கொள்ளையர்கள் ஆகியோரின் நலனைவிட தமிழகத்தின் நலன் தான் மிகவும் முக்கியமானதாகும்.
எனவே, மணல் குவாரிகளை மூடப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து செய்யப்பட்டுள்ள முறையீட்டை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். மணல் குவாரிகளை மூடி, இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக சட்டப் போராட்டமும், அரசியல் நகர்வுகளையும் மேற்கொண்டு வரும் பா.ம.க. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கில் மூலம் ஆற்று மணல் கொள்ளைக்கு நிரந்தரமாக முடிவுரை எழுத சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story