தேர்தல் அலுவலர் அலுவலகம் அருகே மதுசூதனன்-தீபா ஆதரவாளர்கள் இடையே மோதல்
சென்னை தண்டையார்பேட்டையில் தேர்தல் அலுவலர் அலுவலகம் அருகே மதுசூதனன், ஜெ.தீபா ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 145 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் ஜெ.தீபா உள்பட 73 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் ஜெ.தீபா ஆதரவாளர்கள் தேர்தல் அலுவலர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் குறித்து, ஜெ.தீபா ஆதரவாளர்கள் சில விமர்சனங்களை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மதுசூதனன் ஆதரவாளர்களுக்கும், தீபா ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதமும், மோதலும் ஏற்பட்டது. இதில் ஜெ.தீபா ஆதரவாளர்கள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.
சாலை மறியல்
முன்னதாக நடிகர் விஷால் மனுவை தள்ளுபடி செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் தினேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் அகில பாரதிய இந்து மகா சபை சார்பில் மனுதாக்கல் செய்த தனலட்சுமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவருடைய ஆதரவாளரான அகில இந்திய சத்தியசேனா தலைவர் வசந்தகுமார் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்டையார்பேட்டையில் அடுத்தடுத்து நடந்த சாலை மறியலால் அங்கு பரபரப்பு நிலவியது.
தீபா விளக்கம்
இதனிடையே தன்னுடைய மனுவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த தேர்தல் அலுவலர் அலுவலகத்துக்கு தீபா நேற்று இரவு வந்தார். அப்போது பூர்வீக சொத்து குறித்து தேர்தல் அலுவலரிடம் விளக்கம் அளிக்க வந்ததாக தீபா தெரிவித்தார்.
Related Tags :
Next Story