ஆர்.கே. நகரில் 100-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் ஓட்டுப்பதிவுக்கு நவீன எந்திரங்கள்
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டால் நவீன வாக்குப்பதிவு எந்திரங்கள் வரவழைக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
சென்னை,
தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-
ஆர்.கே. நகரில் 63 வேட்பாளர்களுக்கும் மேல் (நோட்டாவையும் சேர்த்தால் 64) வேட்பாளர்கள் போட்டிக்களத்தில் இருந்தாலும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தப்போவதில்லை. 63 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் விவிபிஏடி எந்திரத்தை பொருத்த முடியாது.
இனிமேல் எந்த தேர்தலிலும் ஓட்டு சீட்டு முறையை நடைமுறைப்படுத்தக்கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் தெளிவாக உள்ளது.
நவீன எந்திரங்கள்
64 வேட்பாளர்கள் முதல் 384 வேட்பாளர்கள் வரை போட்டியிட்டாலும், அனைவரையும் வாக்குப்பதிவு எந்திரத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடிய எம்3 என்ற நவீன எந்திரத்தை வாங்கியிருக்கிறோம். கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது இசிஐஎல் நிறுவனத்திடம் இருந்து 6 ஆயிரம் எம்3 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 286 வாக்குச்சாவடிகளில் வைக்கப்படுவதற்கு அதிகபட்சம் ஆயிரத்து 700 எந்திரங்கள் போதுமானதாக உள்ளன. 7-ந் தேதி இறுதிப் பட்டியலில் வரும் வேட்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வரும்.
2 பேர் கையெழுத்து
அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் கட்சி சின்னத்தை ஒதுக்கித் தருவதற்கான ஏ மற்றும் பி படிவங்களில் கையெழுத்திடுவதற்கு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய 2 பேரையும் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் அக்கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
அந்த கோரிக்கையை நவம்பர் 30-ந் தேதியன்று தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கான உத்தரவை அ.தி.மு.க.வின் தேர்தல் பணிக்குழு செயலாளர் ஜெயராமன் கொடுத்துள்ளார்.
முதன்முறை
எனவே மதுசூதனனுக்கு வேட்பாளர் அங்கீகாரத்தையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கித் தரும் அந்த படிவங்களில் 2 பேர் கையெழுத்திடுவார்கள். ஒரு கட்சிக்கான படிவங்களில் 2 பேர் கையெழுத்திடுவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.
ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடப்பதற்கும், அன்று 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு கூறப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.
தொப்பி சின்னம்
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காக சின்னங்கள் தவிர, தொப்பி உள்பட வேறு சின்னங்களை வழங்குவதில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் கேட்டால், அதை குலுக்கல் முறையில் வழங்குவோம். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் போக மீதமுள்ள சின்னங்கள், சுயேச்சைகளுக்கு ஒதுக்கப்படும்.
வேட்பாளர் வாகனங்களுடன் வீதி வீதியாக பிரசாரம் செய்வதற்கு முன்பு தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும். வேட்பாளருடன் எத்தனை கார்கள், ஆட்கள் வருகிறார்கள் என்பதை சொல்லி அனுமதி பெறவேண்டும்.
இறுதிப் பட்டியல்
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 903 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 232 பெண் வாக்காளர்களும், 99 மூன்றாம் பாலினத்தவரையும் சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story