‘எனது வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர்’ நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு


‘எனது வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர்’ நடிகர் விஷால் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Dec 2017 5:00 AM IST (Updated: 6 Dec 2017 2:20 AM IST)
t-max-icont-min-icon

எனது வேட்புமனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதாக ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டு நடிகர் விஷால் குற்றம் சாட்டினார்.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இவர் வேட்புமனு தாக்கல் செய்ய முன்மொழிந்த தொகுதியைச் சேர்ந்த 10 பேரில் 2 பேர் திடீரென்று தாங்கள் முன்மொழியவில்லை என்று பின்வாங்கினர். இதனால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விஷால், என்னை முன்மொழிந்தவர்களில் 2 பேர் மிரட்டப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில் மதுசூதனன் ஆட்கள் தன்னை மிரட்டியதாக வேலு என்பவர் விஷாலிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆடியோவை விஷால் வெளியிட்டுள்ளார். அந்த உரை யாடல் விவரம் வருமாறு:-

மிரட்டல்

விஷால்:- வேலு...

வேலு:- சொல்லுங்க சார்.

விஷால்:- கடிதம் கொடுத்து இருக்கீயா? கையெழுத்து எங்களது இல்லைன்னு சொன்னீயா?

வேலு:- எங்கள கூப்பிட்டு மிரட்டினார்கள் சார். மிரட்டி கையெழுத்து வாங்கினார் கள்.

விஷால்:- யார் மிரட்டினார்கள்.

வேலு:- மதுசூதனன் அணி தான். அவர்கள் தான் எங்களை கூப்பிட்டார்கள்.

விஷால்:- எதுக்கு கூப்பிட்டார்கள்.

வேலு:- உங்களை ‘ரிஜக்ட்’ பண்ண கூப்பிட்டார்கள். மதுசூதனன் அலுவலகத்திற்கு கூப்பிட்டார்கள். எங்கள் வீட்டு பெண்ணை கூப்பிட்டு, தாங்கள் சொல்வதை போல சொல்ல வேண்டும் என்று கூறி வீடியோ எடுத்தார்கள்.

2 ஆயிரம் ரூபாய் கட்டுகள்

விஷால்:- யார் எடுத்தார்கள்?

வேலு:- ஆர்.எஸ். ராஜேஷ்.

விஷால்:- எவ்வளவு கொடுத்தார்கள்? பணத்திற்கு விலை போய்ட்டியா?

வேலு:- இல்ல சார். நாங்க விஷால் கட்சியில் தான் இருக்கிறோம் என்று சொன்னோம். 2 ஆயிரம் ரூபாய் கட்டில் பாதி கொடுத்தார்கள். நான் வாங்கவில்லை. மண்டல அலுவலகத்திற்கு கூட்டிட்டு போய் பொய் கையெழுத்துன்னு வாக்குமூலம் வாங்கி விட்டார்கள். அவர்கள் (சுமதி) மனக்கஷ்டத்தில் இருக்கிறார்கள்.

விஷால்:- எங்க இருக்காங்க... ஒரு தடவ என்கிட்ட பேச சொல்லுங்க. என் கையெழுத்து இல்லன்னு அவங்கள சொல்ல சொல்லுங்க. நான் நல்லது பண்றதுக்கு தான் அரசியலுக்கு வந்தேன். மனசாட்சியோடு சொல்ல சொல்லு.

வேலு:- ஓ.கே.சார். நான் கூட்டிட்டு வர்ரேன்.

இவ்வாறு அந்த உரையாடல் நடந்தது.

பின்னர், நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முகாந்திரம் இல்லை

என்னுடைய வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. சின்ன விஷயத்தினால் பிரச்சினை வந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி நியாயமாக என்ன செய்ய வேண்டுமோ? அதை செய்து இருக்கிறார். தேர்தலில் சந்திப்போம். நல்லதையே நினைப்போம். 2 பேரின் கையெழுத்து சம்பந்தப்பட்டவர்களே போடவில்லை என்று புகார் வந்தது. விசாரணை நடத்தியதில் அதில் எந்த முகாந்திரமும் இல்லை.

யார் தூண்டிவிட்டு என் மனுவை நிராகரித்தார்கள்? என்பதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.

தடை இருக்க தான் செய்யும்

நாளை (இன்று) முதல் மக்களை நேரடியாக சந்தித்து தேர்தலை நேர்மையாக சந்திக்க இருக்கிறேன். மனுதாக்கல் செய்ததில் இருந்து, மனு ஏற்கப்பட்டது வரை எல்லாமே போராட்டத்தோடு தான் இருந்து இருக்கிறது.

நல்லது நடப்பதாக இருந்தால் தடை இருக்க தான் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story