சினிமா தியேட்டர்களில் வாகனம் நிறுத்த கட்டணம் குறைப்பு கார்களுக்கு ரூ.20, மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.10
சினிமா தியேட்டர்களில் வாகனம் நிறுத்துவதற்கு கார்களுக்கு ரூ.20 எனவும், மோட்டார் சைக்கிள்களுக்கு ரூ.10 எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக கூடுதல் தலைமைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சினிமா (ஒழுங்குமுறை) விதிகள் 195-ன் 91பி பிரிவில் திருத்தங்களை கொண்டு வந்து தமிழக கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வாகனம் நிறுத்தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிடப்படுகிறது. மாநகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் 3 சக்கர மோட்டார் வாகனங்களுக்கு ரூ.20 வசூலிக்க வேண்டும். அங்கு இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ரூ.10 வசூலிக்கப்பட வேண்டும்.
சைக்கிள்களுக்கு விதிவிலக்கு
சிறப்பு நிலை நகராட்சிகள் தவிர மற்ற நகராட்சிகளில் உள்ள தியேட்டர்களில் கார் மற்றும் 3 சக்கர மோட்டார் வாகனங்களுக்கு ரூ.15 வசூலிக்க வேண்டும். அங்கு இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ரூ.7 வசூலிக்கப்பட வேண்டும். பேரூராட்சிகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ள திரையரங்குகளில் கார் மற்றும் 3 சக்கர மோட்டார் வாகனங்களுக்கு ரூ.5 வசூலிக்க வேண்டும்.
அங்கு இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு ரூ.3 வசூலிக்கப்பட வேண்டும்.
எந்த தியேட்டரிலும் சைக்கிள்களுக்கு எந்தக்கட்டணமும் வசூலிக்கப்படக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய கட்டணம்
தற்போது தமிழகத்தில் மால் இல்லாத தியேட்டர்களில் கார்களுக்கு 40 ரூபாயும், மோட்டார் சைக்கிள்களுக்கு 20 ரூபாயும், மால் உள்ள தியேட்டர்களில் கார்களுக்கு (ஒரு மணி நேரத்திற்கு) 40 ரூபாயும், மோட்டார் சைக்கிள்களுக்கு (ஒரு மணி நேரத்திற்கு) 30 ரூபாயும் வாகனம் நிறுத்த கட்டணமாக வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர்களில் வாகனம் நிறுத்த கட்டண குறைப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு நன்றி
இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த மாதம் எங்களது தமிழ் திரையுலகில் உள்ள அத்தனை அமைப்புகளும் தலைவர் விஷால் தலைமையில் தமிழக முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருந்தோம். அதில், திரையரங்க நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்குதல். திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை முறைப்படுத்துதல் அடங்கிய மனுவினை அளித்தோம்.
மனு அளித்த உடனே தமிழக அரசு திரையரங்கு நுழைவு கட்டணத்தினை முறைப்படுத்தி உயர்த்தி வழங்கியது. தற்போது எங்களது மற்றொரு கோரிக்கையான திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டண வசதியை முறைப்படுத்தியுள்ளதற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், தமிழ் திரையுலகினர் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story