தாயைக்கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த் மும்பையில் கைது
தாயைக்கொன்று தலைமறைவாக இருந்த ஹாசினி சிறுமி கொலைக்குற்றவாளி தஷ்வந்த் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
சென்னை மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (வயது 35). இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களது மகள் ஹாசினியை (6), கடந்த பிப்ரவரி மாதம் 6-ந்தேதி, அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் (24), என்ற வாலிபர் தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையோரம் அனகாபுத்தூர் அருகே தீ வைத்து எரித்தார்.
இதுதொடர்பாக மாங்காடு போலீசார் தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதற்கிடையே, கடந்த செப்டம்பர் மாதம் தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு அவரை ஜாமீனில் விடுவித்தது.
இதையடுத்து குன்றத்தூர் சம்பந்தம் நகர் ஸ்ரீராம் சாலையில் உள்ள ஒரு வீட்டிற்கு தஷ்வந்த், அவரது தந்தை சேகர், தாய் சரளா ஆகியோர் வாடகைக்கு வந்தனர். இந்தநிலையில், சூதாட்டம் மற்றும் போதைக்கு அடிமையான தஷ்வந்த் கடந்த 2-ந்தேதி தனது தாயிடம் சூதாட்டத்தில் ஈடுபட பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.பணம் தர மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அவர், தனது தாய் என்றும் பார்க்காமல் சரளாவை கொலை செய்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 25 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். இதையடுத்து தஷ்வந்த்தை குன்றத்தூர் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மும்பையில் கைதாகியுள்ள தஷ்வந்த் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வர வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story