பாபர் மசூதி இடிப்பு தினம்:சென்னையில் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்:சென்னையில் பல்வேறு இடங்களில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2017 1:32 AM IST (Updated: 7 Dec 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னை,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னையில் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். தா.பாண்டியன், தொல்.திருமாவளவன் போன்ற கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ரெயில் நிலைய முற்றுகை போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்ததை தொடர்ந்து, ரெயில் நிலைய முற்றுகை போராட்டம் கண்டன ஆர்ப்பாட்டமாக மாறியது.

அதன்படி, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.முகமது ஹாலித் தலைமையில் சென்னை எல்.ஜி.சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண், குடந்தை அரசன், ஆனந்தமுருகன், இளங்கோ யாதவ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சி.மகேந்திரன், சவுந்தரராஜன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மன்சூர் காஷிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதே போன்று, எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கண்டன உரையாற்றினார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்த வந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியினரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விமான நிலையம் அருகே போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஆசர்கானாவில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story