ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கக்கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை


ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கக்கூடாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 7 Dec 2017 1:40 AM IST (Updated: 7 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்களை துணை வேந்தர்களாக நியமிக்கக்கூடாது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித்தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. துணைவேந்தர் பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பித்தார்கள், அவர்களில் தகுதியானவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதெல்லாம் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே தெரிந்த மர்மமாக இருந்து வந்த நிலையில் இப்போது வெளிப்படையாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது.

ஆனாலும், இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பதவிக்கும் விண்ணப்பித்திருப்பவர்களின் விவரங்களைப் பார்க்கும்போது நல்ல துணைவேந்தர்கள் அமைவார்களா? என்ற ஐயம் ஏற்படுகிறது.

இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் முன்னாள் துணைவேந்தர்கள். அவர்களில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையானோர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் ஆவர். ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் யார் துணைவேந்தராக தேர்வு செய்யப்பட்டாலும் அது பல்கலைக்கழகத்தை சீரழித்துவிடும்.

எனவே திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பவர்களில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களின் விண்ணப்பங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுமட்டுமின்றி விண்ணப்பித்துள்ள அனைவரின் தகுதிகளையும் வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அடுத்தடுத்த கட்டங்களுக்கு தேர்வு செய்யப்படுவோர் எந்த தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரங்கள் பல்கலைக்கழக இணையதளங்களில் வெளியிடப்படுவதையும் தேர்வுக்குழுவினர் உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story