தீபன், சுமதி தேர்தல் அதிகாரி முன் ஆஜராகும் வாய்ப்பு குறைவு விஷால் போட்டியிடுவதற்கான வாய்ப்பு முடிவுக்கு வருகிறது?
கெடு முடிவதால் தீபன், சுமதி இருவரும் தேர்தல் அதிகாரி முன் ஆஜராகும் வாய்ப்பு குறைவு. எனவே ஆர்.கே. நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவதற்கான வாய்ப்பு முடிவுக்கு வருகிறது?
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது பல்வேறு புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டது இல்லை. இதனால் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய் யப்பட்ட விவகாரம் வேறு விவாதமாக மாறியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர் தேர்தலில் போட்டியிட 131 பேர் 145 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் விஷால் வேட்புமனு 72 வது மனுவாக விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
அப்போது விஷாலின் வேட்புமனுவில் அவரை முன்மொழிந்துள்ள 10 பேரில் சுமதி, தீபன் என்ற 2 பேர் போலியாக சேர்க்கப்பட்டு இருப்பதாக சில
வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் சுமதி, தீபன் இருவரையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்பு ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது சுமதி, தீபன் இருவரும், “விஷால் வேட்பு மனுவில் இருப்பது எங்கள் கையெழுத்து இல்லை” என்றனர். அதை ஏற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி வேலுச்சாமி, “விஷாலை போதுமான அளவு நபர்கள் முன்மொழியவில்லை” என்று கூறி அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
இதை ஏற்க மறுத்த விஷால் தேர்தல் அதிகாரியை சந்தித்து “சுமதி, தீபன் இருவரும் மிரட்டப்பட்டுள்ளனர்” என்றார். மேலும் அது தொடர்பான ஆடியோ பதிவு ஒன்றையும் காட்டினார். ஆனால் அதை ஏற்க தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தயங்கினார்.
இதையடுத்து அவருடன் விஷாலும், அவரது ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இரவு 8.10 மணிக்கு வெளியில் வந்த விஷால் தனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக தெரிவித்தார். தேர்தல் கமிஷனுக்கு நன்றியும் கூறினார்.
ஆனால் இரவு 11.15 மணிக்கு நடிகர் விஷால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
நடிகர் விஷால் வேட்பு மனு விவகாரத்தில் எப்படி பரிசீலனை நடந்தது என்ற விளக்கத்தையும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி வெளியிட்டார். இதனால் நடிகர் விஷால் கடும் அதிர்ச்சி அடைந்தார். தனது வேட்புமனுவை சதி செய்து திட்டமிட்டு தள்ளுபடி செய்து விட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
குறிப்பாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முதலில் தனது வேட்புமனுவை ஏற்பதாக கூறி விட்டு பிறகு இரவில் முடிவை மாற்றியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். தேர்தல் அதிகாரி தன் மனுவை ஏற்பதாக கூறி கை குலுக்கியதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறினார்.
இந்த நிலையில் நடிகர் விஷால் நேற்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் கொடுத்தார். வேட்புமனு பரிசீலனையின் போது நடந்தது என்ன என்பதை அவர் மனுவில் எழுதி கொடுத்தார்.
பிறகு அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் புகார்கள் அனுப்பினார். மேலும் சட்ட ரீதியாக போராடவும் அவர் ஆலோசித்து வருகிறார்.
விஷால் வேட்புமனு விவகாரம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இதுகுறித்து தேர்தல் கமிஷன் மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். நடிகர் விஷாலின் வேட்புமனுவை மீண்டும் பரிசீலனை செய்யலாமா? என்று அந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதற்கு முன்பு பர்கூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் தள்ளுபடி செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீண்டும் பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் மறுபரிசீலனை நடந்து வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. அதே போன்று நடிகர் விஷால் வேட்புமனு விவகாரத்திலும் மறுபரிசீலனைக்கு
நடவடிக்கை எடுக்கலாமா? என்று ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் அதில் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. எனவே விஷால் வேட்புமனு தள்ளுபடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எத்தகைய முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இன்று காலை பரபரப்புடன் நிலவியது.
நடிகர் விஷால் வேட்புமனு மீண்டும் மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமானால் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அந்த கடிதத்தின் அடிப்படையில்தான் வேட்புமனு மறுபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இன்று காலை இது பற்றி தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் கேட்டபோது, “அத்தகைய கடிதம் எதுவும் தனக்கு வரவில்லை” என்றார். அதுபோல சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயனும் தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்றார்.
இந்த நிலையில் விஷால் மனுவை முன்மொழிந்த தீபன், சுமதி நேரில் வந்து கையெழுத்து தங்களது தான் என கூறினால் மனு ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மனு ஏற்கப்பட்டால் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும், இன்று மாலை 3 மணி வரை விஷால் மனு ஏற்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
ஆனால் கெடு முடிய குறைந்த நேரங்கலே இருப்பதால் தீபன், சுமதி இருவரும் தேர்தல் அதிகாரி முன் ஆஜராகும் வாய்ப்பு மிகவும் குறைவு. தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்ட மனு ஏற்கப்பட்ட முன்னுதாரணங்கள் இல்லை எனவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கிறது. எனவே ஆர்.கே. நகர் தேர்தலில் விஷால் போட்டியிடுவதற்கான வாய்ப்பு முடிவுக்கு வருகிறது?
Related Tags :
Next Story