டி.டி.வி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு
ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவு தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இதையடுத்து, ஆர்.கே.நகரில் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 131 பேர் 145 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனையில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நடிகர் விஷால், ஜெ.தீபா உள்பட 73 பேரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது என தேர்தல் அலுவலர் வேலுச்சாமி அறிவித்தார்.
இதற்கிடையே, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று இறுதி நாள் என்பதால், மேலும் 13 சுயேச்சைகள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 59 பேர் போட்டியிடுவது உறுதியானது.
இந்த தேர்தலில் ஒரே ஒரு பெண் வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது. 29 பேர் தொப்பி சின்னத்தை கோரி இருந்தனர். எனவே டிடிவி தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என தேர்தல் ஆணையம் கூறியது. இன்று மாலை 4.15 மணியளவில் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தொடங்கியது.
பதிவுசெய்யப்பட்ட கட்சிகளுக்கு குலுக்கல் முறையில் தொப்பி சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது. சுயேச்சை வேட்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மட்டும் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்தனர். குலுக்கல் முறையில் நமது கொங்கு முன்னேற்றக்கழக வேட்பாளர் ரமேஷுக்கு தொப்பி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
தொப்பி, விசில், கிரிக்கெட்பேட் சின்னங்கள் பிறருக்கு ஒதுக்கப்பட்டதால் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. விரும்பி கோரிய 3 சின்னமும் கிடைக்காத நிலையில் குலுக்கல் முறையில் பிரஷர் குக்கர் சின்னம் டிடிவி. தினகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில்,
துரோகிகளின் பிரஷரை அதிகரிக்கச் செய்யவே குக்கர் சின்னம் தேர்ந்தெடுத்தோம்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
Related Tags :
Next Story