ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பிரசாரம்


ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து பிரசாரம்
x
தினத்தந்தி 8 Dec 2017 4:30 AM IST (Updated: 8 Dec 2017 12:51 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளராக இ.மதுசூதனன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரசாரம் மேற்கொண்டனர். கொருக்குப்பேட்டை அரிநாராயணபுரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், பிரசாரத்தை தொடங்கினர்.

திறந்த ஜீப்பில் வேட்பாளர் மதுசூதனனுடன், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் மலர் தூவி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். வாக்காளர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்து பேசியதாவது:-

எப்படி வளம் பெறும்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கது. அ.தி.மு.க.வின் வலிமையை நிரூபிக்கும் தேர்தல். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி அம்மாவின் தொகுதி என்று முத்திரை பதிக்கப்பட்டது. இந்த தொகுதியில் இருந்து பலர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தொகுதியில் போதிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

ஜெயலலிதா வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஆன பிறகு தான் ஏழை-எளிய, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைய ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி இருக்கிறார். இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்தால், ஆர்.கே.நகர் தொகுதி வளம் பெறும் என்று சொல்கிறார். எப்படி வளம் பெறும்?

விடிவு காலம்

மு.க.ஸ்டாலின் 5 ஆண்டு காலம் சென்னை மாநகராட்சி மேயராக இருந்து இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதி தான். மு.க.ஸ்டாலின் அதிகாரத்துக்குட்பட்ட பகுதியாகத் தான் இருந்தது. அப்போது எந்த திட்டங்களையும் ஆர்.கே.நகர் பகுதி மக்களுக்கு நிறைவேற்றவில்லை.

அதன்பிறகு, உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதல்-அமைச்சர் என 5 ஆண்டுகள் பதவியில் இருந்து இருக்கிறார். அப்போதும் அவர் தொகுதியை எட்டிப்பார்க்கவில்லை. எந்த அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. ஜெயலலிதா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு முதல்-அமைச்சர் ஆன உடன் தான் தொகுதிக்கு விடிவு காலம் கிடைத்தது என்பதை ஆணித்தரமாக சொல்ல முடியும்.

கல்லூரியை கொடுத்தார். பல்வேறு நலத்திட்டங்களை தந்துள்ளார். அவர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்ந்து செயல்படுத்திட அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

மக்களுடைய வெற்றி

இந்த தொகுதிக்கு ஏராளமான திட்டங்கள் வருவதற்கு மதுசூதனன் அடித்தளமிட்டவர். ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆனபிறகு, மதுசூதனனை அழைத்து தான் ஆர்.கே.நகர் தொகுதிக்கு என்னென்ன திட்டங்கள் செய்ய வேண்டும்? என்று கேட்டறிந்தார். அதன்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தந்தார். ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றி மக்களுடைய வெற்றியாக இருக்கும். இருபெரும் தலைவர்களின் வெற்றியாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்து பேசும்போது, ‘ஆர்.கே.நகர் தொகுதி பற்றி ஜெயலலிதா பேசும்போது, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்கள், அடித்தள மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்று சொன்னார். அதன்படி, வீடுகள் கட்டுவதற்கான கணக்கெடுக்கும் பணி ஏற்கனவே முடிந்துள்ளது. தேர்தல் முடிந்ததும், தரமான, உறுதியான வீடுகள் கட்டித்தரப்படும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் புகழ் நிலைத்திருக்க மதுசூதனனை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்’ என்றார்.

தேர்தல் பணிமனை திறப்பு

பிரசார ஜீப்பில் டி.ஜெயகுமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.பாண்டியராஜன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

முன்னதாக சென்னை காசிமேடு சூரிய நாராயண மூர்த்தி தெருவில் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரிப்பன் வெட்டி பணிமனையை திறந்து வைத்தார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், வைத்தியநாதன் எம்.பி. ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

அ.தி.மு.க. தேர்தல் துண்டு பிரசுரங்களை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதனை முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பெற்றுக்கொண்டார். கூடுதல் கமிஷனர் ஜெயராமன், இணை கமிஷனர் சுதாகர் ஆகியோர் தலைமையில் ஏராளமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பிரசாரத்தின் போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சில குழந்தைகளுக்கு பெயர் வைத்தார். அதில் ஒரு குழந்தைக்கு ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார்.

Next Story