வேட்பு மனு விவகாரத்தில் நடைமுறையை பின்பற்றுவதில் பிழை ராஜேஷ் லக்கானி பேட்டி


வேட்பு மனு விவகாரத்தில் நடைமுறையை பின்பற்றுவதில் பிழை ராஜேஷ் லக்கானி பேட்டி
x
தினத்தந்தி 8 Dec 2017 5:15 AM IST (Updated: 8 Dec 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்புமனு விவகாரத்தில் நடைமுறையை பின்பற்றுவதில் பிழை இருந்ததாக ராஜேஷ் லக்கானி கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அளித்த பேட்டி வருமாறு:-

நடிகர் விஷால் மனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக எந்த அறிக்கையையும் என்னிடம் தேர்தல் கமிஷன் கேட்கவில்லை. எனக்கு எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தேன்.

வேட்புமனுவை நிராகரித்தால் அதற்கான காரணத்தை எழுத்துமூலம் தேர்தல் நடத்தும் அதிகாரி அளிக்க வேண்டும். வாய்மொழியாக சொல்ல முடியாது. விஷால் விஷயத்தில் அந்த நடைமுறையை பின்பற்றுவதில் பிழை உள்ளது. முதலில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கூறிய அவர், அதன் பிறகு நிராகரிக்கப்பட்ட மனு ஏற்கபட்டதாகவும் வாய்மொழியாக கூறியுள்ளார்.

இறுதியில்தான் அவரது மனு நிராகரிக்கப்பட்டதற்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக கூறியுள்ளார். இதுகுறித்தும், வேட்புமனு தாக்கல் செய்த போது தேர்தல் பார்வையாளர்கள் இல்லாதது குறித்தும் தேர்தல் கமிஷனுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. வேட்புமனு விவகாரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவுதான் இறுதியானது.

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை பின்னர் ஏற்றுக்கொண்டதற்கான முன்னுதாரணங்கள், தமிழகத்தில் பர்கூர் மற்றும் குஜராத்தில் ஒரு தொகுதியிலும் ஏற்கனவே உள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மாற்றப்படுவாரா? என்பதை இந்திய தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்.

தற்போது தேர்தல் களத்தில் 59 பேர் உள்ளனர். இவர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓட்டு எந்திரத்தில் ஒட்டப்படவேண்டிய வேட்பாளர் மற்றும் சின்னங்கள் போன்ற விபரங்களைக் கொண்ட வாக்குச்சீட்டு அச்சிடும் பணி உடனே தொடங்கும்.

வாகனத்தில் தேர்தல் பிரசாரம் செய்ய டி.டி.வி.தினகரனுக்கு அனுமதி கேட்டு 4 நாட்களாகியும் இதுவரை போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை என்று வெற்றிவேல் புகார் அளித்தார். இதுகுறித்து உடனடியாக விசாரித்து அனுமதி வழங்க கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

24-ந் தேதி ஓட்டு எண்ணிக்கையை ஒட்டி ஆர்.கே. நகர் தொகுதிக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுவதா அல்லது சென்னை மாவட்டம் முழுவதும் டாஸ்மாஸ் கடைகளை மூடுவதா என்பது குறித்து மதுவிலக்கு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது.

வாக்கு எண்ணிக்கையின்போது மாவட்டம் முழுவதுமே மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். ஆனால் வாக்கு எண்ணும் நாளில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால், அந்தத் தொகுதியில் மட்டும் மதுக்கடைகளை மூடலாமா? என்று ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story