மணிசங்கர் அய்யர் இடைநீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
மணிசங்கர் அய்யர் காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மயிலாடுதுறை ,
மயிலாடுதுறை தொகுதி முன்னாள் எம்.பி.யாகவும் முன்னாள் மத்திய மந்திரியாகவும் மணிசங்கர் அய்யர் பொறுப்பில் இருந்தார். இவர், அடிக்கடி தனது கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். இந்தநிலையில் நேற்று முன்தினம் புதுடெல்லியில் நடைபெற்ற அம்பேத்கர் நினைவு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியையும், ராகுல்காந்தியையும் விமர்சித்து பேசினார். அதற்கு மணிசங்கர் அய்யர், பிரதமர் நரேந்திர மோடியை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி, மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு கடுமையான ஆட்சேபம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கட்சி தலைமை, மணிசங்கர் அய்யரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி எதிரே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் பண்ணை சொக்கலிங்கம் தலைமையில் கட்சியினர் ஒன்று கூடினர். அப்போது மணிசங்கர் அய்யரை காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்த கட்சி தலைமைக்கு ஆதரவாகவும், கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்தும் கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்போது மணிசங்கர் அய்யருக்கு எதிராக கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story