மீனவர்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறியதால் என்ன நஷ்டம் வந்துவிட்டது? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி


மீனவர்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறியதால் என்ன நஷ்டம் வந்துவிட்டது? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
x
தினத்தந்தி 9 Dec 2017 1:00 AM IST (Updated: 8 Dec 2017 10:53 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறியதால் என்ன நஷ்டம் வந்து விட்டது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கன்னியாகுமரி

மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசையை சந்தித்து பேசினார். ஒகி புயலால் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆயர் மந்திரியிடம் அளித்தார்.

இதனை தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. குமரி மாவட்ட மீனவர்கள் குஜராத், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு உணவு, போர்வை, டீசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி இருக்கிறோம். காணாமல் போன மீனவர்களை தேட மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொய் தகவல் பரப்பப்படுகிறது. மீனவர்களை தேடும் பணியில் கடற்படையினருடன் சேர்ந்து மீனவர் குழுக்களும் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் இறந்த மீனவர்களுக்கு அரசு வழங்கிய நிவாரணத்தொகை போல தமிழக அரசும் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையை அமைச்சர்கள் சரியாக சொல்லாததால் தேடுதலில் சிக்கல் ஏற்பட்டது.

காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்டு தரக்கோரி மீனவ மக்கள் போராட்டம் நடத்துவது தவறு இல்லை.

குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்து அங்கு ஆய்வு செய்யும். புயல் சேத பகுதிகளை பார்வையிட எடப்பாடி பழனிசாமி நேரில் வரவேண்டும்.

குமரி மாவட்டத்தில் ஆய்வு செய்வதற்காக கவர்னர் வரவில்லை. எந்த பொறுப்பில் உள்ளவர்களுக்கும் மனிதாபிமானம் உண்டு. புயலால் பாதிக்கப்பட்டு, கதறி கொண்டு இருந்த மக்களை சந்தித்து கவர்னர் ஆறுதல் கூறியதால் என்ன நஷ்டம் வந்துவிட்டது? இதனை அரசியல் ஆக்க வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story