ஊழல், லஞ்சத்திற்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


ஊழல், லஞ்சத்திற்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 9 Dec 2017 12:30 AM IST (Updated: 8 Dec 2017 10:58 PM IST)
t-max-icont-min-icon

மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஊழல், லஞ்சத்திற்கு எதிரான சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆசிய நாடுகளில் ஊழல் குறித்து எடுக்கப்பட்ட சர்வேயில் நம் இந்திய நாடு ஊழல் நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பதாக செய்தி வெளிவந்துள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய ஒன்று என்பது மட்டுமல்ல வெட்கப்பட வேண்டிய ஒன்று.

நோய் வந்தால் அதனைக் குணப்படுத்த மருந்து, மாத்திரைகள் உள்ளது. ஆனால் இந்த ஊழல் என்ற நோயைக் குணப்படுத்தவும், ஒழிக்கவும் மனிதன் தானாக மனம்மாறி திருந்தினால் மட்டுமே முடியும். இதற்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிமனிதரும், அரசியல் சம்பந்தப்பட்ட நபரும், அதிகாரியும் தானாக முன்வந்து ஊழலுக்கு இடம் கொடுக்கமாட்டோம் என்ற உறுதியோடு இருந்தால் ஊழல் ஒழியும்.

எனவே, பொதுமக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகிய ஒட்டுமொத்த நாட்டு மக்கள் அனைவரும் ஊழல், லஞ்சத்திற்கு இனி ஒருபோதும் இடம்கொடுக்க முன்வரக்கூடாது. அதே சமயம் ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிரான விழிப்புணர்வை நாள்தோறும் நாடு முழுவதும் உள்ள அனைவரிடமும் ஏற்படுத்த வேண்டியது ஆளும் ஆட்சியாளர்களின் கடமை.

மேலும், ஊழலுக்கும், லஞ்சத்திற்கும் எதிரான சட்டத்தை கடுமையாக்கி, முழுமையாக, முறையாக கடைப்பிடித்து நாட்டில் ஊழலில்லா நிர்வாகம் நடைபெற மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று த.மா.கா. வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story