‘விஷால் வேட்புமனுவை நாங்கள் முன்மொழியவில்லை’ தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தீபன், சுமதி விளக்கம்


‘விஷால் வேட்புமனுவை நாங்கள் முன்மொழியவில்லை’ தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தீபன், சுமதி விளக்கம்
x
தினத்தந்தி 9 Dec 2017 4:15 AM IST (Updated: 9 Dec 2017 12:19 AM IST)
t-max-icont-min-icon

‘விஷால் வேட்புமனுவை நாங்கள் முன்மொழியவில்லை’ தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தீபன், சுமதி விளக்கம் அளித்தனர்.

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை நாங்கள் முன்மொழியவில்லை என்று தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம் தீபன், சுமதி ஆகியோர் அளித்த வாக்குமூலம் தொடர்பான வீடியோ காட்சி நேற்று வெளியானது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றபோது நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது.

விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்தவர்களில் தீபன், சுமதி ஆகிய 2 பேர் தாங்கள் முன்மொழியவில்லை என்று தெரிவித்ததால், அவருடைய மனு நிராகரிக்கப்பட்டது. நடிகர் விஷால் இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் சென்று முறையிட்டார்.

மேலும், இந்த பிரச்சினை குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திடமும், கோர்ட்டிலும் முறையிட போவதாக நேற்று முன்தினம் விஷால் தெரிவித்தார்.

இந்தநிலையில் விஷால் வேட்பு மனுவை தாங்கள் முன்மொழியவில்லை என்று தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம் தீபன், சுமதி ஆகியோர் தனித்தனியாக அளித்த வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சி நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் தீபன், சுமதி ஆகியோர் சென்னை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அறையில் அவரிடம் வாக்குமூலம் அளிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம் தீபன் அளித்த விளக்கம் வருமாறு:-

என் பெயர் தீபன். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த வேட்புமனுவை நான் முன்மொழியவில்லை. அதில் என்னுடைய கையெழுத்து போலியாக போடப்பட்டுள்ளது. இதனை உங்களிடம் (தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம்) தெரிவிப்பதற்காகவே வந்தேன். ஏற்கனவே நடந்த விசாரணையின்போது, தெரிவித்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன்.

விஷால் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் நான் கையெழுத்து போடவில்லை என்று உங்களிடம் தெரிவித்ததும் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்தேன். அடையாளம் தெரியாத நபர்கள் என்னை போனில் தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தார்கள். அவர்கள் யார்? என்று எனக்கு தெரியவில்லை.

தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு வந்து நடந்ததை சொல்.. என்று ஒரு நபர் அழைப்பு விடுத்தார். நானும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நடந்ததை சொல்கிறேன் என்று அவரிடம் தெரிவித்தேன். எந்த தவறும் செய்யாத நான் உண்மையை சொல்வதற்கு யாருக்கும் பயப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள் முன்னிலையில் தீபன் விளக்கம் அளித்தார். அவர்களிடம் தீபன் நடந்த விவரங்களை ஆங்கிலத்திலும் கூறினார்.

தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம் சுமதி அளித்த விளக்கம் வருமாறு:-

என்னுடைய பெயர் சுமதி. என்னால் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை. மீடியாவுக்கு பயந்து இருந்தேன். வேறு எதுவும் எனக்கு பிரச்சினை இல்லை. விஷால் முன்மொழிந்ததாக குறிப்பிட்ட பேப்பரில் நான் கையெழுத்திடவில்லை. நான் அந்த பேப்பரை பார்க்க கூடவில்லை. எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இதை யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான் சொல்லவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தீபன், சுமதி ஆகியோர் இவ்வாறு தெரிவித்ததாக அந்த வீடியோவில் காட்சிகள் பதிவாகி இருந்தது.

Next Story