ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பதிவு ஆவணங்கள் ஐகோர்ட்டில் தாக்கல் விசாரணை தள்ளிவைப்பு


ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை பதிவு ஆவணங்கள் ஐகோர்ட்டில் தாக்கல் விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 9 Dec 2017 12:33 AM IST (Updated: 9 Dec 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டபோது, பெறப்பட்ட ஜெயலலிதாவின் கை விரல் ரேகை பதிவை, ஐகோர்ட்டில் கர்நாடக மாநில சிறைத்துறை நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் சரவணன், சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது, அ.தி.மு.க வேட்பாளராக ஏ.கே.போசை அறிவித்தும், அவருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்ட படிவத்தில் உள்ள ஜெயலலிதாவின் கை விரல் ரேகையின் உண்மைத்தன்மை குறித்து டாக்டர் சரவணன் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயலலிதா சுயநினைவுடன் தான் இந்த கை விரல் ரேகையை படிவத்தில் பதிவு செய்தாரா? என்ற சந்தேகத்தையும் அவர் எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பி.வேல்முருகன், கடந்த நவம்பர் 24-ந் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதில், ‘சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்ட போது, அவரிடம் பெறப்பட்ட கை விரல் ரேகை, கையெழுத்து உள்ளிட்ட ஆவணங்களை கர்நாடக மாநில சிறைத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆதார் அடையாள அட்டைக்காக ஜெயலலிதாவிடம் பெறப்பட்ட கை விரல் ரேகையை ஆதார் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பரப்பன அக்ரஹாரா சிறையின் ஜெயிலர் மோகனகுமார் நேரில் ஆஜராகி, முத்திரையிடப்பட்ட உறையில் ஜெயலலிதாவின் கை விரல் ரேகை ஆவணங்களை தாக்கல் செய்தார். அதில், கை விரல் ரேகை பதிவு ஆவணம், எலக்ட்ரானிக் பதிவுகள் மூலம் பதிவு செய்யப்பட்ட விரல் ரேகை பதிவை கொண்ட குறுந்தகடு (சி.டி.) ஆகியவை இருந்தது. இதை உறையை பிரித்து, அந்த ஆவணங்களை நீதிபதி பார்வையிட்டார். இதையடுத்து ஆதார் ஆணையத்தின் துணை தலைமை இயக்குனர் ஒய்.எல்.பி.ராவ், நீதிபதி முன்பு ஆஜரானார்.

ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், ‘ஆதார் ஆணைய சட்டவிதிகளின்படி, தனி நபர்களின் கை விரல் ரேகை உள்ளிட்ட அந்தரங்க தகவல்களை யாரிடமும் கொடுக்க முடியாது. அதேநேரம், ஒரு நபரின் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றை மட்டுமே கொடுக்க முடியும். எனவே, ஜெயலலிதாவின் கை விரல் ரேகை பதிவை சட்டவிதிகளின்படி இந்த ஐகோர்ட்டுக்கு தர முடியாது’ என்று வாதிட்டார்.

அதற்கு நீதிபதி, ‘முதலில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஆதார் அட்டைக்காக விண்ணப்பம் செய்தாரா? அவரது கை விரல் ரேகை, விழி ரேகை உள்ளிட்டவற்றை ஆதார் ஆணையம் பெற்றதா? ஆதார் அட்டை அவருக்கு வழங்கப்பட்டதா? என்பது குறித்து முதலில் பதில் சொல்லுங்கள்’ என்றார்.

இதற்கு பதிலளித்த ஆதார் ஆணையத்தின் வக்கீல், ‘இதுகுறித்து விரிவான மனுவை தாக்கல் செய்கிறேன்’ என்று கூறினார். அவரது கோரிக்கையை நீதிபதியும் ஏற்றுக் கொண்டார்.

பின்னர் வழக்கு ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ., ஏ.கே.போஸ் தரப்பு வக்கீல் எழுந்து, ‘பரப்பன அக்ரஹாரா சிறையில் பதிவு செய்த ஜெயலலிதாவின் கை விரல் ரேகையையும், ஆதார் அட்டைக்காக அவரிடம் பெறப்பட்ட விரல் ரேகையையும் கர்நாடகா சிறைத் துறையும், ஆதார் ஆணையமும் வழங்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு கடந்த நவம்பர் 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ளது’ என்று கூறினார்.

அதற்கு நீதிபதி, ‘இந்த உத்தரவின் அடிப்படையில், கர்நாடக சிறைத் துறை நிர்வாகம், ஆவணங்களை தாக்கல் செய்துவிட்டது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பயனற்றதாகிவிடும். இருந்தாலும், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பற்றி முழுமையாக தெரியாமல், எந்த முடிவுக்கும் வர முடியாது’ என்று கருத்து தெரிவித்தார்.

பின்னர், கர்நாடக சிறைத்துத்துறை நிர்வாகம் தாக்கல் செய்துள்ள ஆவணங்களுக்கு ஒப்புதல் அளித்து, சாட்சிகள் சட்டம் பிரிவு 30-ன்படி, உறுதிமொழி கடிதத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற 15-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story