உடன்குடி அனல்மின் நிலைய பணிக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


உடன்குடி அனல்மின் நிலைய பணிக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Dec 2017 3:15 AM IST (Updated: 9 Dec 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் பணிக்கு தடை கேட்டு சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ‘சதர்ன் சென்ட்ரல் சீனா பவர் எனர்ஜி டிசைனிங் இன்ஸ்டிடியூட் திரேசே கன்சோர்டியம்’ என்ற சீன நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், உடன்குடி அனல் மின்நிலையம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டது. இதில் எங்கள் நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டது. ஆனால், ஒப்பந்த ஆவணங்களில் குறைபாடுகள் உள்ளதாக கூறி எங்களது டெண்டர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. எனவே, உடன்குடி அனல்மின் நிலையம் அமைக்கும் ஒப்பந்த பணியை எங்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தது.

மேலும், உடன்குடி அனல் மின்நிலையம் அமைக்க புதிதாக ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் கோரியுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று இடைக்கால மனு ஒன்றையும் தாக்கல் செய்தது.

இந்த இடைக்கால மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, உடன்குடி அனல் மின்நிலையம் அமைக்க 2-வது முறையாக கோரப்பட்ட டெண்டர் மீது மேற்கொண்ட நடவடிக்கை எடுக்க தடை விதித்து 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்துவந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு சீன நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அந்த உத்தரவில், மனுதாரர் நிறுவனம் விதிகளை தீவிரமாக கடைபிடித்து இந்த டெண்டர் நடவடிக்கையில் கலந்துகொள்ளவில்லை. நிறுவனம் குறித்த முக்கிய விவரங்களை துணை ஆவணங்களாக தனியாகத் தான் தாக்கல் செய்துள்ளது. எனவே, மனுதாரர் நிறுவனம் மறைமுகமாக இந்த டெண்டர் நடவடிக்கையில் விளையாடுகிறது என்று தெளிவாக தெரிகிறது‘ என்று கூறியுள்ளார்.

எனவே, மனுதாரர் நிறுவனத்துக்கு பணி வழங்க மறுத்தது சரிதான். பெல் நிறுவனம் தன்னுடைய ஒப்பந்த பணியை மேற்கொள்ளலாம். ஒப்பந்த நடவடிக்கைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறேன். மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story