கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயலால் 5 ஆயிரம் வீடுகள் சேதம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயலால் 5 ஆயிரம் வீடுகள் சேதம்
x
தினத்தந்தி 9 Dec 2017 3:45 AM IST (Updated: 9 Dec 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து இருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் தெரிவித்தார்.

சென்னை,

ஒகி புயலால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து சென்னை எழிலகத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கடற்படை, கடலோர காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் இதுகுறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் கூறியதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் காரணமாக இதுவரை 12 பேர் இறந்து விட்டனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 32 வீடுகள் சேதமடைந்துள்ளன. 12 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. தற்போது மலை கிராமங்களில் மின் இணைப்பு சீரமைக்கப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் மட்டும் 20 ஆயிரம் மரங்களுக்கு மேல் சாய்ந்துள்ளன. ஆயிரத்து 500 ரப்பர் மரங்கள், ஆயிரத்து 926 வாழை மரங்கள், 287 ஹெக்டேர் நெல், 54 ஹெக்டேர் தென்னை, 21.48 ஹெக்டேர் மிளகு செடிகள் பாதிக்கப்பட்டன. பயிர்கள் சேத கணக்கெடுப்பு பணி தொடர்கிறது.

13 படகுகளில் சென்ற 35 மீனவர்களை பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. ஆழ்கடலுக்குள் சென்று நீண்ட நாள் தங்கியிருந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் பற்றி வீடு வீடாகச் சென்று பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியலை மற்ற மாநிலங்களில் உள்ள மீனவர் பட்டியலுடன் ஒப்பிட்டபோது, 547 மீனவர்கள் மற்றும் 66 படகுகள் பற்றிய விவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்களை மீட்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளி மாநிலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் மூலம் அந்தந்த மாநிலங்களிடம் இருந்து நிவாரண பொருட்கள், டீசல், ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை போன்ற உதவிகள் பெறப்பட்டுள்ளன.

அந்த மாநிலங்களில் தங்கியுள்ள மீனவர்களின் பட்டியலில் தந்தை பெயர் குறிப்பிடப்படாததால், அந்த பட்டியல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஒகி புயல் பற்றிய எச்சரிக்கை, கன்னியாகுமரி மற்றும் அருகில் உள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு நவம்பர் 29-ந் தேதி முதலே விடப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story