ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக தகவல்: சேகர் ரெட்டி டைரியின் பக்கங்கள் வெளியானதால் பரபரப்பு


ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக தகவல்: சேகர் ரெட்டி டைரியின் பக்கங்கள் வெளியானதால் பரபரப்பு
x
தினத்தந்தி 9 Dec 2017 5:30 AM IST (Updated: 9 Dec 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான சேகர் ரெட்டி டைரியின் பக்கங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை,

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக வெளியான சேகர் ரெட்டி டைரியின் பக்கங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆனால், சேகர் ரெட்டி இதை மறுத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 178 கிலோ தங்க நகைகளும், ரூ.34 கோடி அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், ரூ.147 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த சோதனையின்போது, சேகர் ரெட்டி வீட்டில் இருந்து ரகசிய டைரி ஒன்றும் சிக்கியதாக கூறப்பட்டு வந்தது. மேலும், அந்த டைரியில், சேகர் ரெட்டியிடம் இருந்து பணம் பெற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகளின் பெயர்களும் இடம் பெற்றிருந்ததாக சொல்லப்பட்டது.

இந்த நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், சேகர் ரெட்டியின் ரகசிய டைரியின் பக்கங்கள் சில வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்தப் பக்கங்களில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காலத்தில், அப்போது முதல்-அமைச்சர் பொறுப்பை கவனித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு ரூ.2½ கோடியும், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ரூ.5 கோடியும் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், அமைச்சர்கள் பி.தங்கமணி, எம்.சி.சம்பத், ஆர்.பி. உதயக்குமார் ஆகியோரின் பெயர்களும் அந்த டைரியின் பக்கங்களில் இடம் பெற்றிருந்தது.

இதனால், சேகர் ரெட்டியின் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சேகர் ரெட்டி டைரியின் பக்கம் வெளியான நிலையில், அது தொடர்பாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கருத்து தெரிவித்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் தொடக்கத்தில் இருந்தே சேகர் ரெட்டி கும்பலுடன் ஓ.பன்னீர்செல்வம் எந்த அளவுக்கு தொடர்பு வைத்திருக்கிறார் என்பதை பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறேன். சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆதாரங்களோடு தெரியவந்தது.

இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, முழுமையான உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தி.மு.க. கோரியுள்ளது. அவர்களுக்கு உண்மையாகவே தொடர்பு இல்லை என்றால், செய்தியை வெளியிட்ட ஆங்கில தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை மீது வழக்கு தொடரட்டும். தேவைப்பட்டால் புதிய கவர்னரை நிச்சயமாக சந்திக்கும் சூழல் வரும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் மணல் கொள்ளை நடத்தி கோடிகளை குவித்த சேகர் ரெட்டியிடம் இருந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் தொடர்ந்து கையூட்டு பெற்று வந்ததற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. சசிகலாவின் உறவினர் தினகரனுக்கும் கையூட்டு வழங்கப்பட்டு இருப்பதாக சேகர் ரெட்டியின் டைரிக் குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் உறவினர் தினகரன் மற்றும் மேலும் பல அமைச்சர்களின் பெயர்களும் சேகர் ரெட்டியிடம் பணம் பெற்றதாக அவரது டைரிக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக செய்தி கூறுகிறது. இப்போது கூடுதல் ஆதாரங்கள் வெளியாகியுள்ள சேகர் ரெட்டியிடம் கையூட்டு வாங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

விசாரணை நியாயமாக நடைபெறுவதற்கு வசதியாக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் உள்ளிட்ட தமிழக அமைச்சரவை கூண்டோடு பதவி விலக வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி கவர்னரிடம் முறையிடுவதுடன், ஐகோர்ட்டிலும் பா.ம.க. வழக்குத் தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேகர் ரெட்டியின் டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அமைச்சர்களாக நீடிப்பதற்கு தார்மீக உரிமையற்றவர்களாக ஆகிவிடுகின்றனர். எனவே, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், வெளிவந்துள்ள டைரி பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சர்களை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும், சேகர் ரெட்டி மீதான வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சேகர் ரெட்டி பேட்டி

சேகர் ரெட்டியின் டைரியின் பக்கங்கள் வெளியான பிரச்சினை இவ்வாறாக இருக்க சேகர் ரெட்டி இதை மறுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:-

வாழ்க்கையில் எனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது. தற்போது வெளியாகி இருக்கும் டைரியில் இருக்கும் கையெழுத்து யாருடையது என்றே எனக்கு தெரியாது. அது என்னுடைய கையெழுத்து அல்ல. நான் ஏன் அமைச்சர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். என்னுடைய வியாபாரம் போக்குவரத்து, உள்கட்டமைப்பு சார்ந்தது. நான் ஏன் அவர்களுக்கு பணம் கொடுக்கப்போகிறேன். ஏதோ ஒரு கருமத்தை காட்டி என் டைரி என்கிறார்கள். அதில் இருப்பது என்னுடைய கையெழுத்தே அல்ல. நான் கையெழுத்தை ஒப்பிட்டு பார்ப்பதற்கு இன்றே தயாராக இருக்கிறேன். பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளட்டும்.

மணல் எடுப்பது 15 ஆண்டுகளுக்கு முன்பே அரசின் வசம் சென்றுவிட்டது. அப்படி இருக்கும் போது எப்படி நான் மணல் ஒப்பந்தத்தை பெற முடியும். எனக்கு சொந்தமாக 400 லாரிகள், 300 பொக்லைன் எந்திரங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் சாலை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறேன். முறையாக வரி கட்டுகிறேன். என்னுடைய வீட்டில் நகையோ, பணமோ இருந்ததில் தவறில்லை. யாரும் நகை, பணத்தை வைத்துக் கொள்ளக்கூடாது என்று சட்டம் இல்லை.

ஓ.பன்னீர்செல்வத்துடன் தொடர்பு இல்லை

நான் முறையாக வரி கட்டுகிறேன். ஆண்டுக்கு நானும், என் சார்ந்த நிறுவனங்களும் சுமார் ரூ.100 கோடி அளவுக்கு வரி மட்டுமே கட்டுகிறோம். நாங்கள் ஏன் ஏமாற்றப் போகிறோம். என்னுடைய பணம் அனைத்தும் நியாயமாக சம்பாதித்தது, இதில் கருப்புப்பணம் என்பதே கிடையாது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் எனக்கும் பழக்கம் கிடையாது. முக்கிய பிரமுகர்கள் யார் கோவிலுக்கு வந்தாலும் அப்போது நான் அங்கு இருந்தால் அவர்களை வரவேற்பேன். அப்படித் தான் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. அதை வைத்து நானும், அவரும் நண்பர்கள் என்று சொல்லிவிட முடியாது. இரண்டே முறை தான் நான் அவரை பார்த்திருக்கிறேன்.

முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் என்னுடைய குடும்ப நண்பர். அதைத் தவிர அவர் எனக்கு டெண்டரில் எந்த உதவியும் செய்ததில்லை. நான் உலகளாவிய டெண்டர் தான் எடுக்கிறேன். யார் வேண்டுமானாலும் அதை எடுக்கலாம். ஒரு ஒப்பந்தம் என்பது சட்ட முறைப்படி நடப்பது. அதை எப்படி ஒரு அதிகாரி தனக்கு சார்ந்தவருக்கு ஒதுக்க முடியும் என்று தெரியவில்லை.

இவ்வாறு சேகர் ரெட்டி கூறினார்.

Next Story