மத்திய அரசு அச்சகம் கோவையிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் பிரதமருக்கு வைகோ கடிதம்


மத்திய அரசு அச்சகம் கோவையிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும் பிரதமருக்கு வைகோ கடிதம்
x
தினத்தந்தி 10 Dec 2017 12:30 AM IST (Updated: 9 Dec 2017 10:40 PM IST)
t-max-icont-min-icon

கோவையிலேயே மத்திய அரசு அச்சகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு, வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திரமோடிக்கு நேற்று கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:–

கோவை மத்திய அரசு அச்சகத்தை நான் பார்வையிட்டபோது என் கவனத்திற்கு வந்த காட்சிகளை, நிகழ்வுகளை தங்களின் மேலான பார்வைக்குக் கொண்டு வருகின்றேன். அச்சகங்களின் மறுசீரமைப்பு, இணைப்பு என்ற மத்திய அரசின் முடிவின் காரணமாக கோவை மத்திய அரசு அச்சகத்தை மராட்டியத்தில் உள்ள நாசிக் மத்திய அரசு அச்சகத்துடன் இணைக்க முடிவு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக அறிந்தேன்.

அந்த முடிவுக்குப் பிறகு தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் வருத்தத்துடனும், கலக்கத்துடனும் இந்தப் பிரச்சினை தொடர்பாக உடனடியாக நீங்கள் பிரதமரிடம் தெரிவித்து, இணைப்பு நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையும், வேண்டுகோளும் விடுத்தனர்.

தொழிலாளர்களின் துயரம் மற்றும் மனப்பூர்வமான வேண்டுகோளும் அரசின் முடிவைவிட முக்கியமானதாக உள்ளதால், அவர்களின் துயர்நீக்க கருணையோடு தங்களுடைய முடிவை பரிசீலனை செய்ய வேண்டும்.

எனவே, தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார் துயரம் நீக்க தமிழக மக்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய கோயம்புத்தூர் மத்திய அரசு அச்சகத்தை மூடுகின்ற முடிவை கைவிட்டு, மற்ற அச்சகங்கள் போலவே கோயம்புத்தூர் அச்சகத்தையும் மென்மேலும் முன்னேற்றமடையச் செய்ய வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

Next Story