குடி தண்ணீருக்காக வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
குடி தண்ணீருக்காக வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள குடிநீர் தேவையினை பூர்த்தி செய்ய வைகை அணையிலிருந்து, வைகை பூர்வீகபாசன பகுதி–3 மற்றும் 2–க்கு குடிதண்ணீருக்காக முறையே 1071.36 மி.க. அடி மற்றும் 457.92 மி.க. அடி தண்ணீரை வைகை ஆற்றுப் படுகையை நனைக்கும் வகையில் வைகை ஆற்றில் 5.12.2017 முதல் 10.12.2017 மற்றும் 12.12.2017 முதல் 15.12.2017 வரை திறந்துவிட ஏற்கனவே ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்சொன்ன இரண்டு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தங்களின் பகுதியிலுள்ள ஆற்றுப்படுகை மழை இல்லாமல் வறண்டுபோய் உள்ளதால், வைகை அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடுமாறு வேண்டியுள்ளனர். பொதுமக்களின் வேண்டுகோளினை ஏற்று,வைகை ஆற்றில் தற்போது திறந்துவிடப்பட்டுவரும் தண்ணீருடன், கூடுதலாக ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு முறையே 148.64 மி.க. அடி மற்றும் 65.08 மி.க. அடி தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story