ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு
x
தினத்தந்தி 10 Dec 2017 5:15 AM IST (Updated: 10 Dec 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் 2-வது இடத்தை பிடிப்பார் என்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த தொகுதியில் உள்ள மக்களின் மனநிலை என்ன? என்பது குறித்து பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் 50 பேர் 3 குழுக்களாக பிரிந்து கருத்து கணிப்பு நடத்தினர்.

கடந்த மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 7-ந் தேதி வரை நடைபெற்ற இந்த கருத்து கணிப்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட 7 வார்டுகளில் இளைஞர், இளம் பெண்கள், பெரியவர்கள் என பல தரப்பிலிருந்தும் மொத்தம் 1,767 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது.

மொத்தம் 10 கேள்விகளை முன்வைத்து கேட்கப்பட்ட கருத்து கணிப்பின் விவரங்கள் பின்வருமாறு:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. 33 சதவீத வாக்குகளை பெரும் என்றும், எனவே அக்கட்சி வேட்பாளர் வெற்றி பெற நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், ஆளும் கட்சியான அ.தி.மு.க.வுக்கு, 26 சதவீதம் வாக்குகளும், டி.டி.வி.தினகரனுக்கு 28 சதவீதம் வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 2.18 சதவீத வாக்குகளும், பா.ஜ.க.வுக்கு 1.23 சதவீத வாக்குகளும், நோட்டாவுக்கு 5.59 சதவீத வாக்குகளும், பிற 4 சதவீதம் வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில் சட்டம் ஒழுங்கு மோசம் என்று 73 சதவீதம் பேரும், குடிநீர் வினியோகம் மோசம் என்று சுமார் 70.5 சதவீதம் பேரும், விலைவாசி மிக அதிகம் என்று 82.9 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். தற்போதைய அரசியல் சூழலில் பிரச்சினையை தீர்க்கும் தலைவர்கள் உள்ள கட்சி என்பதில் தி.மு.க.வுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

39.9 சதவீதம் பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2-வதாக டி.டி.வி.தினகரனுக்கு 30.15 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கும் 21 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியை உடனே கலைக்க வேண்டும் என்று 59.2 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். 0.53 சதவீதம் பேர் ஆட்சி தொடர வேண்டும் என கூறியுள்ளனர். கடந்த தேர்தலைவிட தினகரனுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கூடியுள்ளதாக 71 சதவீதம் பேரும், ஆதரவு குறைந்துள்ளதாக 22.3 சதவீதம் பேரும், எதுவும் கருத்தில்லை என 6 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இரட்டை இலை சின்னம் கிடைத்த பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு? உள்ளது என்று கேட்ட கேள்விக்கு டி.டி.வி.தினகரனுக்கு செல்வாக்கு உள்ளதாக 66 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். அதேபோல், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு செல்வாக்கு உள்ளதாக 29 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story