தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி பிரசாரம் செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை


தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி பிரசாரம் செய்தால் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2017 3:30 AM IST (Updated: 10 Dec 2017 1:14 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் விதியை மீறி பிரசாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் போலீசாரின் ரோந்து- வாகன சோதனை பணிகளை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆய்வு செய்தார்.

அப்போது கூடுதல் கமிஷனர் ஜெயராம், இணை கமிஷனர் சுதாகர் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின் போது, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 1,500 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

12 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 நிலையான கண்காணிப்பு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 36 ரோந்து வாகனம், 26 ரோந்து பைக்குகளில் ரோந்து பணி நடந்து வருகிறது. முதற்கட்டமாக 4 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக வர உள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடைமுறை விதியை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநில, மாவட்ட வாகனங்கள் நகருக்குள் வர தடை இல்லை. ஆனால், தவறான நோக்கத்தோடு வந்திருந்தால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story