ஆர்.கே.நகர் தேர்தல்: 2 கம்பெனி துணை ராணுவம் வந்தது ரோந்து பணி தொடங்கியது


ஆர்.கே.நகர் தேர்தல்: 2 கம்பெனி துணை ராணுவம் வந்தது ரோந்து பணி தொடங்கியது
x
தினத்தந்தி 10 Dec 2017 4:45 AM IST (Updated: 10 Dec 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்தனர்.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் வந்தனர். அவர்கள் உடனடியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எந்தவித முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

பிரசாரம், வாகனங்கள் அணிவகுப்பு, பூத் சிலிப் விநியோகம் போன்றவற்றில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பறக்கும் படை அதிகாரிகளும், போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 12 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருந்தார்.

அதன்படி முதற்கட்டமாக மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 2 கம்பெனி துணை ராணுவப்படையினர் நேற்று இரவு சென்னை வந்தனர்.

ஒரு கம்பெனியில் 136 வீரர்கள் என 2 கம்பெனியில் 272 வீரர்களும் துப்பாக்கி ஏந்தியபடி தங்களது ரோந்து பணியை உடனடியாக தொடங்கினர்.

பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை எல்.ஐ.சி.நகரில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் ஒரு கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களும், புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் ஒரு கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களும் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் உள்ளூர் போலீசாருடன் அவர்கள் இணைந்து வாகன சோதனை, ரோந்து ஆகிய பணிகளை தீவிரமாக மேற்கொள்ள உள்ளனர். மீதி 10 கம்பெனி துணை ராணுவப்படையினர் அடுத்தடுத்து இங்கு வருகை தர உள்ளனர்.

Next Story