எதிர்க்கட்சிகள் புகார் எதிரொலி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்


எதிர்க்கட்சிகள் புகார் எதிரொலி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 10 Dec 2017 5:45 AM IST (Updated: 10 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.

சென்னை,

ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் 21-ந் தேதி(வியாழக் கிழமை) நடைபெறுகிறது.

இந்த தேர்தலுக்கான மனுத்தாக்கல் முடி வடைந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 59 வேட்பாளர் கள் போட்டியிடுவதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அறிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமியிடம், நடிகர் விஷால் 4-ந் தேதியன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முதலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

பின்னர் அவர் நேரில் வற்புறுத்தியதை அடுத்து, அவரது வேட்புமனுவை ஏற்பதாக வேலுச்சாமி அறிவித்தார். ஆனால் நள்ளிரவில் மீண்டும் விஷாலின் வேட்புமனுவை தள்ளுபடி செய்து எழுத்துப்பூர்வமாக வேலுச்சாமி அறிவித்தார்.

தேர்தல் விதிகளின்படி, வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் வேலுச்சாமி தவறு செய்திருந்ததாக புகார் கூறப்பட்டது. மேலும் அவரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

அதைத் தொடர்ந்து வேலுச்சாமியை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுதொடர்பாக இந்திய தேர்தல் கமிஷனுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் கமிஷன் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதினார்.

அதற்கு 8-ந் தேதியிட்டுள்ள பதில் கடிதத்தை ராஜேஷ் லக்கானிக்கு, இந்திய தேர்தல் கமிஷன் அனுப்பியது. அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீங்கள் கடந்த 7-ந் தேதி எழுதியிருந்த கடிதத்தின் அடிப்படையில் இந்த பதில் அனுப்பப்படுகிறது. நீங்கள் அனுப்பி இருந்த அதிகாரிகளின் பட்டியலை தேர்தல் கமிஷன் பரிசீலித்தது.

அதில் இடம் பெற்றிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீன்நாயரை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story