27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதி வழங்கவேண்டும் டாக்டர் ராமதாஸ்


27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதி வழங்கவேண்டும் டாக்டர் ராமதாஸ்
x
தினத்தந்தி 11 Dec 2017 12:15 AM IST (Updated: 10 Dec 2017 10:53 PM IST)
t-max-icont-min-icon

27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு சமூக நீதியை வழங்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மண்டல் கமி‌ஷன் பரிந்துரையின்படி, மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பு 1990–ம் ஆண்டு வி.பி.சிங் ஆட்சியில் வெளியிடப்பட்டது. ஆனாலும் அதற்கான நடைமுறைகள் முடிந்து 1993–ம் ஆண்டு முதல் தான் அது வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் 24 ஆண்டுகள் ஆகியும் ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டின் அளவு ஒற்றை இலக்கத்தை கூட தாண்டாதது மிகப்பெரிய அநீதி ஆகும்.

மத்திய அரசின் அதிகார மையம் என்பது மத்திய அமைச்சரவை செயலகம் தான். அங்குள்ள 64 ‘ஏ‘ பிரிவு பணியிடங்களில் ஒன்றில் கூட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அமர்த்தப்படவில்லை. மாறாக 60 பணியிடங்களில் உயர் வகுப்பினரும், 4 பணியிடங்களில் பட்டியல் இனத்தவரும் அமர்த்தப்பட்டுள்ளனர். இது இயல்பாக நடந்த ஒன்றாக இருக்க முடியாது; திட்டமிட்டு இழைக்கப்பட்ட துரோகமாகவே இருக்கும்.

மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பில் முழு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. இதற்கு மத்திய அரசே பொறுப்பு.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயர் முறையை நீக்குதல், பின்னடைவு பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆள்தேர்வு முகாம்களை நடத்துதல் ஆகியவை அடங்கிய சிறப்பு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதன் மூலமாக மட்டுமே இந்த குறையை சரி செய்ய முடியும். எனவே, அத்தகைய சிறப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி, பின்னடைவு பணியிடங்களை நிரப்பி பிற்படுத்தப்பட்டோருக்கு முழுமையான சமூக நீதியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story