மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்


மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி கடலுக்குள் இறங்கி மீனவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2017 5:45 AM IST (Updated: 11 Dec 2017 12:06 AM IST)
t-max-icont-min-icon

புயலில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தக் கோரி, மீனவர்கள் கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில்,

கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர் கள் ‘ஒகி’ புயலில் சிக்கி மாயமானார்கள்.

அவர்களை தேடி கண்டு பிடித்து மீட்கும் முயற்சியில் கடற்படை, கடலோர காவல் படையைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளன. மீனவர்களில் பலர் கரை சேர்ந்து உள்ளனர். பலர் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இன்னும் பலரின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை.

மாயமான மீனவர்களை மீட்க வலியுறுத்தியும், புயலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரண நிதி வழங்க கோரியும், கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க கோரியும் அந்த மாவட்டத்தில் மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், நேற்று காலை முட்டம் பகுதியில் 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் ஆயிரக்கணக்கானோர் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தியவாறு கடலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, மதியம் 12 மணி அளவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்பு அனைவரும் கடலில் இருந்து கரைக்கு வந்து, கலைந்து சென்றனர்.

இதேபோல் ராஜாக்கமங்கலம் துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைகளில் கருப்பு கொடிகளை ஏந்தி கடற்கரையில் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்று சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரையில் மீனவர்கள் நேற்று ஊர்வலம் நடத்தினார்கள்.

தூத்துக்குடி அனைத்து கத்தோலிக்க மீனவர் நல கூட்டமைப்பு சார்பில் தெற்கு கடற்கரை ரோடு பனிமயமாதா ஆலயம் அருகே நேற்று மாலை இரங்கல் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவள்ளூர் மாவட்டம்  திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பாட்டைகுப்பம், நொச்சிக்குப்பம், பெத்தானிகுப்பம், வெங்கடேசபெருமாள் நகர் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு ஆதரவாக நேற்று பேரணி நடத்தினார்கள்

ஒகி புயலில் சிக்கி மாயமானவர்களில் நாகப்பட்டினம் நம்பியார் நகரைச் சேர்ந்த 12 மீனவர்களும் அடங்குவார்கள்.

இவர்களை மீட்க வலியுறுத்தி நாகை நம்பியார் நகரில் உள்ள சமுதாய கூடத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story