ஒகி புயல் பாதிப்பு: ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி
கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிப்படைந்த ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
வங்க கடலில் கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த ‘ஒகி’ புயல் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த மாத இறுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு பணியில் ஈடுபட்ட துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ஒகி புயலினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பயிர் சேதம் பற்றி கணக்கெடுப்பு நடந்தவுடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் ஒகி புயலால் பாதிப்படைந்த ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி இன்று கூறியுள்ளார்.
இதேபோன்று ஹெக்டேர் ஒன்றுக்கு வாழை விவசாயிகளுக்கு 48,500 முதல் 63,500 வரை வழங்கப்படும்.
புதிய கிராம்பு நடவு செய்ய ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.28 ஆயிரம் வழங்கப்படும். மரவள்ளி, மிளகு, பலா உள்ளிட்ட பிற தோட்ட பயிர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்படும்.
ரப்பர் மர ஊடுபயிர் சாகுபடிக்கு ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.