‘கவர்னரை நாளை சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து விளக்குவோம்’ மு.க.ஸ்டாலின் பேட்டி


‘கவர்னரை நாளை சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து விளக்குவோம்’ மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2017 3:30 AM IST (Updated: 12 Dec 2017 12:54 AM IST)
t-max-icont-min-icon

கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை நாளை (புதன்கிழமை) சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து விளக்குவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா அதிகம் நடப்பதால் இடைத்தேர்தலை மீண்டும் ரத்து செய்யப்படலாம் என பா.ஜ.க.வை சேர்ந்த எஸ்.வி.சேகர் தெரிவித்து இருக்கிறாரே?.

பதில்:- பணப்பட்டுவாடா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேர்தல் இப்போது மீண்டும் நடத்தப்படுகிறது. எனவே, இந்த தேர்தலில் அப்படிப்பட்ட முறைகேடுகள் நடைபெறக்கூடாது, அதற்குரிய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் முறையாக எடுக்க வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், தலைமைத் தேர்தல் ஆணையத்திலும் மனுக்களை வழங்கியிருக்கிறோம். ஆகவே, இடைத்தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்.

கேள்வி:- தொல்.திருமாவளவன் தலையை துண்டிக்க வேண்டும் என்று இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த சிலர் அறிவித்துள்ளார்களே?.

பதில்:- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இதுதொடர்பாக தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஆனால், அதன் பிறகும் சிலர் வேண்டும் என்றே திட்டமிட்டு, இதை அரசியல் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சதிகளில் ஈடுபட்டு, இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவது உள்ளபடியே கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை உடனடியாக அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நான் கடுமையாக எச்சரிக்கிறேன்.

கேள்வி:- காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் குறித்து முறையாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கிறதா?.

பதில்:- காணாமல் போன மீனவர்கள் பற்றி முறைப்படி கணக்கெடுப்பு நடத்துவதில்கூட மத்திய - மாநில அரசுகள் அலட்சியமாக இருந்து வருகின்றன. கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்தால் மட்டுமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மீனவர்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கவேண்டும் கவர்னரிடம் கேட்டிருக்கிறேன். தற்போது அவர் ஊரில் இல்லை என்பதால், நாளை மறுநாள் (அதாவது நாளை) நேரம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே, அவரை நேரில் சந்தித்து, மீனவர் பிரச்சினைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைப்போம்.

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ளவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும், இளம்பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்றெல்லாம் அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்படுகிறதே?.

பதில்:- இதுபோல இன்னும் எத்தனை உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை அவர்கள் கொடுத்தாலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் எத்தனை குட்டிக் கரணங்களைப் போட்டாலும், படுத்து உருண்டு புரண்டாலும், அவர்கள் டெபாசிட் வாங்குவதே அரிது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story