குரூப்–4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம்


குரூப்–4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பம்
x
தினத்தந்தி 14 Dec 2017 5:04 AM IST (Updated: 14 Dec 2017 5:03 AM IST)
t-max-icont-min-icon

குரூப்–4, வி.ஏ.ஓ. பதவிகளுக்கு 17 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்–4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பதவிகளுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள். நேற்று மாலை வரை 17 லட்சம் விண்ணப்பதாரர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வு கட்டணம் ரூ.100–ஐ இதுவரை செலுத்தாத விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த 15–ந்தேதி(நாளை) நள்ளிரவு வரை அவகாசம் உள்ளது.

விண்ணப்பித்த அனைவரும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் APPLICATION STATUS என்ற இணைப்பினை ‘கிளிக்’ செய்து தங்களின் விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இணைய வங்கி, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியே பணம் செலுத்தியும் விண்ணப்பம் ஏற்கப்படவில்லை எனில், online payment verification என்ற இணைப்பில் அவர்களது பண பரிமாற்றம் குறித்த விவரங்களை அப்டேட் செய்து APPLICATION STATUS மீண்டும் சரிபார்க்கவும்.

அதில் அனைத்து பண பரிமாற்ற முயற்சிகளும் தோல்வி அடைந்து இருந்தால் வருகிற 15–ந்தேதிக்குள் மீண்டும் தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும். தோல்வி அடைந்த பண பரிமாற்றத்துக்கான தொகை சரிபார்ப்பிற்கு பின்னர், அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அஞ்சலகம் மற்றும் இந்தியன் வங்கி செலுத்துச்சீட்டு மூலமாக தேர்வுக்கட்டணம் செலுத்தியவர்கள் மேற்படி விவரங்களை ‘Application status என்ற இணைப்பில் கோரப்படும் விவரங்களை சமர்ப்பித்து 20.12.2017 வரை காத்திருந்து தங்களது விண்ணப்பத்தின் நிலையினை தெரிந்து கொள்ளவும்.

அதன்பின்னரும், நீங்கள் செலுத்திய தேர்வுக்கட்டணம் ஏற்கப்படவில்லை எனில் தாங்கள் பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டின் நகலினை apdtech2014@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 26–ந்தேதிக்கு முன்னர் அனுப்பவும். தொழில்நுட்ப காரணம் உள்பட எந்த ஒரு காரணத்திற்காகவும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்த இயலாமல் போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல.

மேற்கண்ட தகவல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் (பொறுப்பு) மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story