ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு புது வெளிச்சத்தை பாய்ச்சட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு புது வெளிச்சத்தை பாய்ச்சட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியின் பணப்பட்டுவாடாவால், அதாவது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததால், கடந்த முறை நிறுத்தப்பட்ட இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு எதிராக பிரசாரம் செய்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இப்போது துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துகொண்டு, அதே மதுசூதனனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார்.
கடந்தமுறை எந்த தினகரனை எடப்பாடி பழனிசாமி விழுந்து விழுந்து ஆதரித்தாரோ அவரை இப்போது துரோகி என்கிறார். அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமியை துரோகி என வர்ணித்து சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்கிறார்.
இவர்கள் எல்லோருமே சேர்ந்து செய்த கூட்டுத் துரோகத்தினால் தான், ஜெயலலிதாவின் மரணத்தில் இன்றளவும் கனத்த மர்மம் நீடிக்கிறது. அந்த மர்ம மரணத்தின் காரணமாகத்தான் ஆர்.கே.நகர் தொகுதி தற்போது இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகி இருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.
இ.பி.எஸ், ஓ.பி.எஸ், டி.டி.வி ஆகிய எல்லோருமே ஜெயலலிதா 72 நாட்கள் மரணப்படுக்கையில் இருந்தபோது சசிகலாவின் பக்கம் நின்று கொண்டு, ஜெயலலிதாவின் உண்மையான உடல்நிலையை பொதுமக்களிடம் மட்டுமின்றி, அ.தி.மு.க. தொண்டர்களிடமும் மறைத்து, பொய் மூட்டைகளை நாள்தோறும் அவிழ்த்து விட்டுக்கொண்டிருப்பவர்கள்.
இரட்டைக்குழல் துப்பாக்கி பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். ஊராரிடமிருந்து உண்மையை மறைக்கும் இந்த மூன்று குழல் அல்லது முக்கோணத் துப்பாக்கியை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் அடையாளம் கண்டு, அவர்களை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றும் இவர்களின் சர்வாதிகாரச் சதிக்கு ஆர்.கே.நகர் வாக்காளர்கள் கிஞ்சிற்றும் இடமளிக்க மாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கை கழகத்திற்கு இருக்கிறது.
அப்போது அவர்கள் பணம் கொடுத்தது தினகரனுக்காக. இப்போது, தினகரனை எதிர்த்து நிற்கும் மதுசூதனனுக்காக அதைவிட அதிகமாக பணம் தரத் தயாராக இருக்கிறார்கள் என்றால், இவர்கள் தமிழக அரசின் கஜானாவையே மொத்தமாக களவாடியிருக்கிறார்கள் என்பதை ஆர்.கே.நகர் வாக்காளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மக்களின் பணத்தை மொத்தமாகக் கொள்ளையடித்து விட்டு, அதில் சிறுதொகையை அவர்களுக்குக் கொடுத்து வாக்குகளை விலைபேசி வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கும் ஆட்சியாளர்களுக்குத் தகுந்த பாடத்தைப் புகட்டிட ஆர்.கே.நகர் வாக்காளர்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த ஒரு தொகுதியின் வாக்காளர்கள் எடுக்கப்போகும் முடிவுதான், இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தலில் ஏற்படவிருக்கும் மாற்றத்திற்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதை ஆதாரத்துடன் ஐகோர்ட்டிற்கு கொண்டு சென்றதால், தேர்தல் ஆணையம் அந்தப்போலி வாக்காளர்களை நீக்கம் செய்தது. இந்தப்பணிக்காக தி.மு.க.வை ஐகோர்ட்டு பாராட்டியிருப்பது, தி.மு.க.வினரின் ஜனநாயகப் போராட்டத்திற்கும், உணர்வுக்கும் கிடைத்துள்ள நற்சான்றிதழ். இதே விழிப்புடன், இடையில் உள்ள நாட்களிலும் இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க.வினர் செயலாற்ற வேண்டும்.
தி.மு.க. பக்கம் உள்ள ஆர்.கே.நகர் மக்களை விலைபேசி, தம் பக்கம் திருப்புதற்கு அரசு எந்திரத்தின் துணையுடன் செயல்பட முயற்சிக்கிறார்கள். ஆகவே, கண்ணயராமல் எச்சரிக்கையுடன் இருந்து இதனைக் கவனித்து முறியடிக்க வேண்டியது தி.மு.க.வினரின் கடமை. அயராத களப்பணியும், ஆற்றலும், விழிப்புணர்வும் மிக்க செயல்பாடுகள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளாக மாறி, தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற துணை நிற்கட்டும். அ.தி.மு.க. ஆட்சியில் இருண்டு கிடக்கும் தமிழ்நாட்டில் இந்த இடைத்தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு அடையாளமான புது வெளிச்சத்தைப் பாய்ச்சட்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.