அரசியல் சட்டத்தின்படியே ஆய்வு நடத்தப்படுகிறது கவர்னர் மாளிகை அறிக்கை
கவர்னரின் செயல்பாடு பற்றி பேசுவது சட்டவிரோதம் என்றும், அரசியல் சட்டத்தின்படியே ஆய்வு நடத்தப்படுவதாகவும் கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,
இதுகுறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் கூடுதல் தலைமைச்செயலாளர் ஆர்.ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
இந்திய அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநிலத்தின் நிர்வாகத் தலைமையில் இருப்பவர் கவர்னர் தான். மாநில நிர்வாகத்தின் அனைத்து தரப்பு தகவலையும் பெறுவதற்கு அவருக்கு முழு அதிகாரம் உள்ளது. அதுபோல மாநிலத்தின் அனைத்து பகுதிக்கும் செல்வதற்கு அவருக்கு தடை கிடையாது.
ஆனால் அப்படி செயல்படுவது பற்றி ஒருதலைப்பட்சமாக தகவல்கள், விவாதங்கள், கருத்துகள் கூறப்படுகின்றன. மஞ்சள் காமாலை கண்களோடு பார்க்கும் பொருளெல்லாம் மஞ்சளாக தெரிவது போல சில கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவைகளாக உள்ளன. நியாயத்துக்கு புறம்பான கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர்.
அமைச்சரவை என்ற நிர்வாக அமைப்பும் கவர்னரால் தான் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், அமைச்சர்கள் மூலமாக கவர்னருக்கு மாநில அரசு நிர்வாகத்தில் நேரடி தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த தொடர்பின் மூலம், கவர்னர் மற்றும் அரசு நிர்வாகம் ஆகிய இரட்டை பொறுப்பு இருப்பதை உணரலாம்.
அரசியல் சாசனத்தின் 213–ம் பிரிவின்படி, கவர்னர் அவசர சட்டங்களை பிறப்பித்து அதன் மூலம் சட்டங்களை இயற்ற முடியும். 174–ம் சாசனப் பிரிவின்படி சட்டசபையை கூட்டவோ, கலைக்கவோ முடியும்.
ஆனாலும் கவர்னர் தனிப்பட்ட முறையில் அவருக்கென்று இருக்கும் அதிகாரத்தின்படி, அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமலேயே செயல்படும் அம்சங்களும் உள்ளன.
அரசியல் சாசன அதிகாரங்கள் பற்றி புரியாமல் சிலர் பேசுகின்றனர். மத்திய அரசின் உத்தரவின் பேரில், மாநில அரசின் நிர்வாகத்தில் கவர்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்து தலையிடுகிறார் என்பது அதுபோன்ற குற்றச்சாட்டுகளில் ஒன்று.
இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகளை பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்ததாக, மாவட்டங்களுக்கு சென்று அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்துவது, கவர்னரின் கடமைகளுக்கு உள்பட்டவை அல்ல என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. மாநில அரசின் நிர்வாகம் குறித்த விவரங்களை கவர்னர் அறிந்து கொள்வது, கவர்னரின் கடமைகளில் ஒன்று.
அரசுத் திட்டங்கள், கொள்கைகள் போன்றவற்றை மக்களுக்காக அமல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகள், மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் போன்றவற்றை முதலில் அறிந்துகொள்வது கவர்னருக்கு மிகவும் அவசியம். அந்த விஷயங்கள் பற்றி தெரியாவிட்டால், மாவட்ட நிர்வாகத்தின் நிலை, தரம் பற்றி விளங்கிக்கொள்ள முடியாது.
மாநில நிர்வாகத்தின் தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு, அதுபோன்ற விஷயங்களை முதல்கட்டமாக அறிந்துகொள்வது, அரசியல் சாசனத்தின் அடிப்படையிலான செயல்பாடாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தை எடுத்துக்கொள்வதாக கருதக்கூடாது.
அடுத்ததாக, இதுவரை எந்த கவர்னரும் இப்படி செயல்படவில்லை என்றும் அதற்கு முன்னுதாரணம் இல்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டிலும் ஆதாரம் இல்லை. முந்தைய கவர்னர்கள் நடந்து கொண்டதைப் போல் செயல்படாமல், முன்பு செய்யப்படாததை செய்யும்போது, அது சட்ட விரோதமானது என்றால் மட்டுமே எதிர்க்க முடியும். ஒரு ஆய்வுக்கூட்டத்தில் பங்கெடுப்பது சட்ட விரோதம் இல்லையே. அப்படி இருக்கும்போது, ஆய்வுக்கூட்டம் நடத்துவதற்கு முன்னுதாரணம் இல்லை என்ற குற்றச்சாட்டு வீணானது.
அதுபோன்ற மாவட்ட அளவிலான கூட்டங்களை நடத்துவது, அரசியல் சாசனத்தின்படி ஒரு கவர்னரின் பங்களிப்புதான் என்பது உறுதியான ஒன்று. எனவே அரசியல் சாசனம் பற்றி தெரியாமல் கவர்னரின் செயல்பாடுகள் பற்றி பேசி பதிவு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அது சட்ட விரோதமானது. அரசியல் சாசன அதிகாரம் கொண்ட கவர்னரின் அலுவலகத்தை மரியாதை குறைவாக பேசுவது சட்டப்படி தவறாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.