இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி கூறினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ராவை சந்தித்த பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் த
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி விக்ரம் பாத்ராவை சந்தித்த பிறகு, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
சிறப்பு அதிகாரியை சந்தித்து, ஆர்.கே.நகரில் என்ன நடக்கிறது? எதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்? என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறோம். எழுத்துப்பூர்வமாக சில தகவல்களையும் வழங்கியிருக்கிறோம்.
‘ஆர்.கே.நகரில் வாகனங்கள் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தாலும், அத்துமீறி வரும் தொண்டர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக உட்கார்ந்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.
‘குக்கர்’ போன்ற பரிசு பொருட்களும் தயார் நிலையில் இருக்கின்றன. அத்தனை ஊடகங்களும் பணப்பட்டுவாடாவை பதிவு செய்திருக்கின்றன’ என்று தெளிவாக எடுத்து கூறியிருக்கிறோம். அவரும் மிகுந்த பொறுமையுடனும், அக்கறையுடனும் விவரங்களை கேட்டார்.
சமதளத்தில் இத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. எல்லா கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது. ஆனால் சமதளத்தில் நின்று தேர்தலை சந்தித்தால் மட்டுமே, அவரவர் சக்தி வெளிப்படும். தங்களுக்கு வேண்டிய வாக்காளர்களின் உண்மையாக ஓட்டுகளும் கிடைக்கும். எனவே, நியாயமான தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் விரைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.