பணப்பட்டுவாடா முழுவதும் முடிந்துவிட்டதா? ஆர்.கே.நகரில் வீடுகள் முன்பு ரகசிய குறியீட்டால் பரபரப்பு


பணப்பட்டுவாடா முழுவதும் முடிந்துவிட்டதா? ஆர்.கே.நகரில் வீடுகள் முன்பு ரகசிய குறியீட்டால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:45 AM IST (Updated: 19 Dec 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

பணப்பட்டுவாடா முழுவதும் முடிந்துவிட்டதா? ஆர்.கே.நகரில் வீடுகள் முன்பு ரகசிய குறியீட்டால் பரபரப்பு

சென்னை,

ஆர்.கே.நகரில் வீடுகள் முன்பு ரகசிய குறியீடுகள் போடப்பட்டு உள்ளதால், பணப்பட்டுவாடா முடிந்துவிட்டதற்கான அடையாளம் தான் இது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை வினியோகம் செய்வதாக புகார்கள் எழுந்தது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக அ.தி.மு.க. வினர் மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர். லட்சக்கணக்கில் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா முடிந்துவிட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் சில சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன. கடந்தமுறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டபோது, தொகுதிக்குட்பட்ட வீடுகள் முன்பு இருந்த ரகசிய குறியீடுகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தமுறையும் அதேபோல தொகுதிக்குட்பட்ட அனைத்து வீடுகளின் முன்பும் சுவரில் சில குறியீடுகள் உள்ளன. இந்த குறியீடுகள் அந்த வீடுகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையுடன் ஒத்துப்போகிறது.

எனவே பணப்பட்டுவாடா சத்தம் இல்லாமல் முடிந்துவிட்டது என்றும், பணம் வழங்கியதற்கான அடையாளமே இந்த ரகசிய குறியீடுகள் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த பணப்பட்டுவாடாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர் என்றும், தேர்தல் கமிஷனின் கவனத்தை திசைதிருப்பவே ஆங்காங்கே பணப்பட்டுவாடா நடப்பதாக தகவல் கசியவிடப்பட்டது என்றும் பரபரப்பான தகவல்கள் வெளிவருகிறது. இந்த குறியீடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகள் கவனத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது.

தொகுதி முழுவதும் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. விரைவில் ஆய்வு மேற்கொண்டு, பணப்பட்டுவாடா நடந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆர்.கே.நகரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. 

Next Story