ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் ஓட்டு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு


ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் ஓட்டு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 19 Dec 2017 3:00 AM IST (Updated: 19 Dec 2017 1:26 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதியில் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இங்கு அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் சசிகலா உறவினர் டி.டி.வி.தினகரன் உள்பட 59 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக திருவிழா போல் நடந்து வந்த தேர்தல் பிரசாரம் இன்று (செவ்வாய்கிழமை) மாலை 5 மணியுடன் ஓய்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 903 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 232 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 99 பேரும் ஆவார்கள். மொத்த வாக்காளர்களில் 20 வயதில் இருந்து 29 வயது உடைய இளம் வாக்காளர்கள் 58 ஆயிரத்து 881 பேர் உள்ளனர். இந்த இளம் வாக்காளர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறார்கள்.

வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 256 வாக்குசாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரிக்கு எடுத்து செல்லப்படும். தற்போது ராணிமேரி கல்லூரி பொன் விழா மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

24-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி, தற்போது வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் நாயர், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது-

தேர்தல் கண்காணிக்க 75 பறக்கும் படை உள்பட 161 சிறப்பு படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி முடிந்து விட்டது. நாளை (இன்று) மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. அதனை தொடர்ந்து தொகுதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள். வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேஜைகள் போடப்படும். 18 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:-

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றி 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படும். வாக்குப்பதிவு நேரத்தில் 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் 1,800 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணும் இடத்தில் 500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு அடையாள அட்டை உள்ள முகவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுவரை 30.4 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. 120 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பணம் பிடிபட்ட சம்பவத்தில் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை மாநகராட்சியில் நுண்பார்வையாளர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கார்த்திகேயன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதில் 345 நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story