சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்


சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு கோர்ட்டில் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்
x
தினத்தந்தி 19 Dec 2017 3:30 AM IST (Updated: 19 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார்.

செங்கல்பட்டு,

சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தஷ்வந்த் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

சென்னை மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த ஹாசினி(வயது 6) என்ற சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்(24) என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஜாமீனில் வெளியே வந்த அவர், செலவுக்கு பணம் தராத ஆத்திரத்தில் தாய் சரளாவை கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 25 பவுன் நகையுடன் தப்பி ஓடிவிட்டார்.

மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் செங்கல்பட்டில் உள்ள உத்திரமேரூர் மாஜிஸ்திரேட்டு வீட்டில் அவரை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கு தொடர்பாக கடந்த 13-ந்தேதி செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்த தஷ்வந்தை போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அங்கிருந்த மகளிர் அமைப்பினர், அவரை சரமாரியாக தாக்கினர். செருப்பால் அடித்ததுடன், வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தனர்.

அவர்களிடம் இருந்து தஷ்வந்தை பத்திரமாக மீட்டு நீதிபதி வேல்முருகன் முன்பு ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் தஷ்வந்தின் வக்கீல் விலகிக்கொண்டதால் அவருக்கு இலவச சட்ட உதவி மையம் மூலம் ராஜ்குமார் என்ற வக்கீலை நியமனம் செய்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 18-ந்தேதிக்கு(நேற்று) ஒத்திவைத்தார்.

நேற்று காலை வழக்கத்தைவிட கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் தஷ்வந்தை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் போலீசார் நேரில் ஆஜர்படுத்தினர்.

கடந்த 13-ந்தேதி அவரை கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது பல தனியார் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ததுடன், தஷ்வந்திடம் தனியாக பேட்டி எடுக்கவும் முயன்றதால் மகிளா கோர்ட்டுக்குள் சம்பந்தமில்லாத நபர்கள் அதிகளவில் கூடி விட்டனர்.

இதனை தவிர்க்கும் பொருட்டு நேற்று நீதிபதி வேல்முருகன், மிகவும் ரகசியமாக தஷ்வந்திடம் விசாரணை நடத்தினார். மகிளா கோர்ட்டு கதவுகளை மூடிவிட்டு சம்பந்தப்பட்ட வக்கீல்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

சிறுமி கொலை வழக்கு தொடர்பான சாட்சிகளான சிறுமியின் தந்தை பாபு, தாய் ஸ்ரீதேவி, பக்கத்து வீட்டுக்காரர் முருகன் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை நாளை(புதன்கிழமை) ஒத்திவைத்தார். 

Next Story