ஜெயலலிதா மரணம் பற்றி போலீசில் புகார் அளித்த 302 பேரிடம் விசாரிக்க முடிவு விசாரணை ஆணையம் தகவல்


ஜெயலலிதா மரணம் பற்றி போலீசில் புகார் அளித்த 302 பேரிடம் விசாரிக்க முடிவு விசாரணை ஆணையம் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 12:56 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணத்தை சந்தேக இறப்பு என்று வழக்குப்பதிய வேண்டும் என போலீசில் புகார் அளித்த 302 பேரிடம் விசாரணை நடத்த விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ நிர்வாகம் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வருவதாகவும், அதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும் என்றும் சிலர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனுக்கள் அளித்தனர்.

அதேபோல் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ஜெயலலிதா மரணத்தை சந்தேக இறப்பு என்று வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி உள்பட 302 பேர் புகார் மனுக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது போலீசார் வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.

விசாரிக்க முடிவு

இதைதொடர்ந்து வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தனது புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்ய தேனாம்பேட்டை போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் விசாரணை நடத்தி வருவதால் இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று கூறி கிருஷ்ணமூர்த்தியின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், வக்கீல்கள் என பல்வேறு தரப்பிலும் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட 302 புகார் மனுக்களை விசாரணை ஆணையத்தில் போலீசார் நேற்று ஒப்படைத்தனர்.

இந்த புகார் மனுக்களை பரிசீலித்து, புகார்தாரர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது.

முன்னாள் டீன் ஆஜர்

விசாரணை ஆணையத்தில், சென்னை மருத்துவக்கல்லூரி முன்னாள் டீன் முரளிதரன் நேற்று ஆஜரானார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறக்கும் வரை முரளிதரன் சென்னை மருத்துவக்கல்லூரி டீனாக இருந்து வந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சையை மேற்பார்வையிட அரசு தரப்பில் 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு ஏற்படுத்தப்பட்டது.

அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் அந்த மருத்துவர்கள் குழுவை முரதளிதரன் தான் ஏற்படுத்தினார். இதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவில் இடம்பெற்ற மருத்துவர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர், அவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்து தகவல் தெரிவித்தார்களா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை நீதிபதி கேட்டார். அதற்கு முரளிதரன் பதில் அளித்தார்.

2 மணி நேரம் விசாரணை

அரசு மருத்துவர்கள் குழுவை ஏற்படுத்தியதன் அடிப்படையில், ஜெயலலிதாவை சிகிச்சையின் போது பார்த்தீர்களா? என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அரசு மருத்துவர்கள் குழு அவ்வப்போது தகவல் தெரிவித்தார்களா? எனவும் நீதிபதி அவரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிசிக்சைகள் தொடர்பான விவரங்களை அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவர் குழு தன்னிடம் தெரிவிக்கவில்லை எனவும் கூறி உள்ளார்.

இதன்பின்பு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையில் உள்ள சில சந்தேகங்களை மருத்துவர் முரளிதரனிடம் நீதிபதி கேட்டார். அந்த சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார். சுமார் 2 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது.

ஷீலா பாலகிருஷ்ணன்

இன்று(புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் இருந்து வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகிறார். ஷீலா பாலகிருஷ்ணன் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

இதனால் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த விவரம் தெரியும் என்று கருதி அவரிடம் ஆணையம் விசாரணை நடத்த முடிவு செய்து சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று விசாரணை நடக்கிறது. 

Next Story