“பா.ஜ.க.வுக்கு தமிழகம் ஒருபோதும் இடம் அளிக்காது” வைகோ பேட்டி
“பா.ஜ.க.வுக்கு, தமிழகம் ஒருபோதும் இடம் அளிக்காது” என்றும், “இது பெரியார்-அண்ணா பூமி” என்றும், வைகோ கூறினார்.
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று தனது 96-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை சென்றார். அங்கு க.அன்பழகனுக்கு, சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பணப்பட்டுவாடா
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். அப்போது, ‘ஆர்.கே.நகரில் உனது பேச்சு சிறப்பாக இருந்தது’, என்று அவர் என்னை பாராட்டினார். ‘நாம் எப்போதோ இணைந்து செயல்பட வேண்டியது, இனியாவது இணைந்து செயல்படு’, என்று என்னிடம் க.அன்பழகன் கூறினார்.
இடைத்தேர்தலில் பணநாயகம் தான் வெற்றிபெறும் எனும் நோக்கில் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அ.தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அ.தி.மு.க.-டி.டி.வி.தினகரன் என இரு தரப்பினரும் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். ஆர்.கே.நகரில் நடந்து வரும் செயல்பாடுகள், தேர்தல் ஆணையம் வகுத்த நெறிமுறைகளின்படி இல்லை. என்ன நடந்தாலும் இடைத்தேர்தலில் வெற்றி பெறப்போவது தி.மு.க. தான். அது உறுதி.
பெரியார்-அண்ணா பூமி
குஜராத், இமாசல பிரதேச மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. பா.ஜ.க. இன்னும் 2 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றினாலும், தமிழகத்தில் அவர்கள் ஒரு அடி கூட எடுத்துவைத்து, முன்னேற முடியாது. இது பெரியார்-அண்ணா பூமி.
இந்தியாவிலேயே திராவிட இயக்க உணர்வுகளை கட்டிக்காக்கின்ற இடம், தமிழகம். இங்கு மதசார்பின்மையை தகர்க்கிற, இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தாக, நாட்டின் பன்முக தன்மையை சிதைக்கிற பா.ஜ.க.வுக்கு தமிழகம் ஒருபோதும் இடம் அளிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
சு.திருநாவுக்கரசர்
இதேபோல தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் 96-வது பிறந்தநாளையொட்டி, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story