திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் டிரைவர் இல்லாமல் பின்னோக்கி ஓடி வட்டமிட்ட கன்டெய்னர் லாரி


திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் டிரைவர் இல்லாமல் பின்னோக்கி ஓடி வட்டமிட்ட கன்டெய்னர் லாரி
x
தினத்தந்தி 19 Dec 2017 8:15 PM GMT (Updated: 19 Dec 2017 7:48 PM GMT)

லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் வெள்ளோடு பிரிவில் பின்னோக்கி ஓடி வட்டமிட்டது.

திண்டுக்கல், 

கிருஷ்ணகிரியில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வந்தது. வேகமாக வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் வெள்ளோடு பிரிவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதியது. இதில் அந்த தடுப்பு கம்பிகள் தூக்கி வீசப்பட்டன.

இதையடுத்து சாலையின் ஓரத்தில் லாரியை நிறுத்திய டிரைவர் தள்ளாடியபடி லாரியில் இருந்து கீழே இறங்கினார். ஆனால் லாரியின் சாவியை எடுக்கவில்லை.

இதனால் லாரி இயக்கத்தில் இருந்தது. மேலும் லாரியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அடுத்த சில வினாடிகளில் லாரி தானாக பின்னோக்கி வேகமாக நகர தொடங்கியது.

பின்னர் 4 வழிச்சாலைக்கு சென்ற கன்டெய்னர் லாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் ஏறி, மறுமார்க்கமாக உள்ள சாலையில் இறங்கியது. அந்த லாரி தடுப்பு சுவரில் ஏறி இறங்குவதுமாக பின்னோக்கி வட்டமடித்துக்கொண்டே இருந்தது. இதனால் சாலையில் வந்த அனைத்து வாகனங்களையும் பொதுமக்கள் சில அடி தூரத்திலேயே நிறுத்தினர்.

லாரியை நிறுத்த டிரைவர் பலமுறை முயற்சி செய்து, லாரியை சுற்றிச்சுற்றி வந்தார். மேலும் லாரியில் ஏற முயன்று பலமுறை கீழே விழுந்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் சிலர் லாரியின் சக்கரத்தில் பெரிய கற்களை கொண்டு வந்து போட்டனர். பின்னர் அந்த ஒரு பள்ளத்தில் சிக்கி நின்றது.

இதையடுத்து லாரி டிரைவர் கார்த்திக்கிடம் பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் அம்பாத்துரை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கார்த்திக்கை கைது செய்தனர். 

Next Story