மருதுகணேஷ், டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அ.தி.மு.க. புகார்
மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் விதிமுறையை மீறி தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்து உள்ளதால், அவர்களை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரை அ.தி.மு.க. வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாபு முருகவேல் சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் குறித்து பாபு முருகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகுதி நீக்கம்
வேட்பாளர்கள் செலவு கணக்குகளை தனி சேமிப்பு கணக்கு தொடங்கி தாக்கல் செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். ஆனால், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசும், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரனும் அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி உள்ளனர்.
ஒரு ரூபாய் செலவு செய்தாலும் வங்கி கணக்கு மூலமே கணக்கு காட்ட வேண்டும். ஆனால், கைமாற்றாகவும், கடனுக்கு வாங்கியும் செலவு செய்ததாக அவர்கள் இருவரும் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது அப்பட்டமாக தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே மருதுகணேஷ், டி.டி.வி.தினகரன் ஆகியோரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
போலீசில் புகார்
அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் ஒவ்வொரு செலவு கணக்கையும் முறைப்படி வங்கி கணக்கு மூலம் தாக்கல் செய்துள்ளார். கடந்த 10-ந் தேதி நிலவரப்படி மதுசூதனன் ரூ.4 லட்சம் செலவு செய்துள்ளார். 12-ந் தேதி நிலவரப்படி, டி.டி.வி.தினகரன் ரூ.12 லட்சமும், மருதுகணேஷ் ரூ.9 லட்சமும் செலவு செய்ததாக கணக்கு காட்டி உள்ளனர்.
பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. தொண்டர்களை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் மிரட்டியதாக தண்டையார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story