இறுதி நாள் பிரசாரம்: ஆர்.கே.நகர் தொகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி நாள் பிரசாரமான நேற்று வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று முடிவடைந்தது. இறுதி நாள் பிரசாரமான நேற்று காலையில் இருந்தே ஆர்.கே.நகர் தொகுதி களைகட்டியது.
அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தெருக்களில் வீதி, வீதியாக சென்றும், வீடு, வீடாக சென்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். ஏற்கனவே திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியில் மெட்ரோ ரெயில் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து அடிக்கடி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று களத்தில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்களிடம் தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டமாக சென்று வாக்கு சேகரித்தனர்.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்பட்டது. சில இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நீண்ட வரிசையில் நின்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினார்கள். கடும் சிரமத்துக்கு மத்தியில் நீண்ட நேரத்துக்கு பின்பு நெரிசல் ஏற்பட்ட பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து சென்றதை பார்க்க முடிந்தது. குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட வைத்தியநாதன் பாலம், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்பட பல பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Related Tags :
Next Story