தயாரிப்பாளர் தற்கொலை: அன்புச்செழியன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை


தயாரிப்பாளர் தற்கொலை: அன்புச்செழியன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை
x
தினத்தந்தி 20 Dec 2017 4:30 AM IST (Updated: 20 Dec 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

தயாரிப்பாளரை தற்கொலைக்கு தூண்டியதாக பைனான்சியர் அன்புச்செழியன் மீது பதிவான வழக்கை விசாரிக்க போலீசுக்கு தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

பிரபல நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார். திரைப்பட தயாரிப்பாளரான இவர், கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அதில், பிரபல சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த வழக்கில், முன்ஜாமீன் கேட்டு அன்புச்செழியன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு வருகிற ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், அன்புச்செழியன் மற்றொரு மனுவை தாக்கல் செய்தார்.

தொடர்பு இல்லை

அந்த மனுவில், ‘அசோக்குமாருக்கும், எனக்கும் எந்த ஒரு பண பரிவர்த்தனையும் இல்லை. அவர் என்னிடம் கடன் எதுவும் வாங்கவில்லை. அவருக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னிடம் வாங்கப்பட்ட கடனுக்கு சசிகுமார் மட்டுமே பொறுப்பாவார். எனக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகார் உள்நோக்கமானது. இந்த புகாரை முறையாக விசாரிக்காமல், என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஐ.சுப்பிரமணியம் ஆஜராகி வாதிட்டார்.

தடை விதிப்பு

சசிகுமார் தரப்பு வக்கீல் ஆஜராகி, ‘அசோக்குமார் தற்கொலை செய்வதற்கு முன்பு பலமுறை, அன்புச்செழியன் அவருக்கு போன் செய்துள்ளார். இந்த ஆதாரங்கள் போலீசாரிடம் உள்ளது. எனவே, விசாரணைக்கு தடை விதிக்கக்கூடாது’ என்று வாதிட்டார்.

இதையடுத்து, அன்புச்செழியன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதி, விசாரணையை வருகிற ஜனவரி 29-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். மேலும், போலீஸ் கமிஷனர் பதிலளிக்க வேண்டும். சசிகுமாரும், இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டார். 

Next Story