“பெரியபாண்டியனின் உடலில் துப்பாக்கி குண்டு இல்லை” ராஜஸ்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தகவல்


“பெரியபாண்டியனின் உடலில் துப்பாக்கி குண்டு இல்லை” ராஜஸ்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தகவல்
x
தினத்தந்தி 20 Dec 2017 5:15 AM IST (Updated: 20 Dec 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

“பெரியபாண்டியனின் உடலில் துப்பாக்கி குண்டு இல்லை” என்றும், “அந்த குண்டு எங்கு தேடியும் கிடைக்கவில்லை”, என்றும் ராஜஸ்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

சென்னை நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை தொடர்பான கொள்ளையர்களை பிடிக்க சென்றபோது நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழக தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் பலியானார். இது தொடர்பான வழக்கை, ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்தரன் போலீசார் விசாரித்து வருகிறார்.

விசாரணை அதிகாரியான ஜெய்தரன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பவன்லால் சவுத்ரி இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் உயிரிழந்த பெரியபாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு எதுவும் இல்லை என்றும், அந்த குண்டை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து ஜெய்தரன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பவன்லால் சவுத்ரி, ‘தந்தி டி.வி.’ நிருபரிடம் கூறியதாவது:-

உடலில் குண்டு இல்லை

துப்பாக்கி சூட்டில் பலியான பெரியபாண்டியன் உடலில் துப்பாக்கி குண்டு எதுவும் இல்லை. சம்பவம் நடந்த இடத்தை முழுவதுமாக சோதனையிட்டும், அந்த குண்டு எங்களுக்கு கிடைக்கவில்லை. அந்த குண்டை தீவிரமாக தேடி வருகிறோம்.

பெரியபாண்டியன் மரணம் தொடர்பான விவகாரத்தில் மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது எந்தவிதமான வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. முனிசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வரும் செய்திகள் தவறானது.

முனிசேகர் அளித்த மனு அடிப்படையில் நாதுராம், அவரது மனைவி மஞ்சு உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெரியபாண்டியனின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை கிடைத்தால் மட்டுமே உண்மையிலேயே என்ன நடந்தது? என்பது தெரியவரும்.

அறிக்கைகளின் முடிவில்...

சென்னையில் நடந்த கொள்ளை சம்பவத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை. அது எங்களுக்கு தேவையில்லாதது.

துப்பாக்கி சூட்டில் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரிழந்தது குறித்த வழக்கே எங்களின் பிரதானம். அந்தவகையில் முக்கிய குற்றவாளியான நாதுராமை பிடிக்கும் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.

நாதுராமின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்களிடமும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களுடன் பி.லி.சிட்டி போலீசாரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எங்களை பொறுத்தவரை துப்பாக்கி சூட்டுக்கு நாதுராம் காரணமாக இருக்கமுடியாது என்றே நினைக்கிறோம். ஏனென்றால் சம்பவம் நடந்த சமயத்தில் நாதுராம் மற்றும் தேஜாராமின் குடும்பத்தினரிடம் எந்தவிதமான துப்பாக்கியும் இல்லை.

தேஜாராமின் குடும்பத்தினர்-தனிப்படை போலீசார் இடையே சண்டை நடந்தபோது, தவறுதலாக குண்டு பாய்ந்து பெரியபாண்டியன் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதுகிறோம். இருந்தாலும் அறிக்கைகளின் முடிவில் உண்மை நிலவரம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story