ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அப்பல்லோவில் எடுக்கப்பட்டதா போயஸ் வீட்டில் எடுக்கப்பட்டதா? திருமாவளவன் கேள்வி


ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அப்பல்லோவில் எடுக்கப்பட்டதா போயஸ் வீட்டில் எடுக்கப்பட்டதா? திருமாவளவன் கேள்வி
x
தினத்தந்தி 20 Dec 2017 12:11 PM IST (Updated: 20 Dec 2017 12:11 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ அப்பல்லோவில் எடுக்கப்பட்டதா? போயஸ் வீட்டில் எடுக்கப்பட்டதா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது  எடுத்த வீடியோவை தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது.

முதல் - அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந்தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார்.

 ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது முதல்-அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியில் வந்ததும், இந்த பிரச்சினையை பூதாகரமாக கிளப்பினார்.

தற்போது  ஓய்வு பெற்ற  நீதிபதி ஆறுமுக சாமி  தலைமையில் விசாரணை நடைபெற்று  வருகிறது. 

ஏற்கனவே தினகரன் தரப்பு  ஜெயலலிதா கேட்டுக்கொண்டதன் பேரில் சிகிச்சைக்கான வீடியோ பதிவுகள் எடுக்கப்பட்டது. அந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதை அவசையம் வரும் போது வெளியிடுவோம் என கூறி இருந்தது. 

இந்த  நிலையில் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது  எடுத்த வீடியோவை இன்று தினகரன் தரப்பு வெளியிட்டு உள்ளது. அதில் ஜெயலலிதா பழசாறு அருந்துவது போல் உள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை  தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேர்தலுக்காக இந்த வீடியோவை வெளியிட வில்லை. ஜெயலலிதா குறித்து தவறான கருத்து கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை ஆணையம் என்னை அழைக்கவில்லை, அழைத்தால் வீடியோ ஆதாரத்தை கொடுப்பேன் இன்னும் பல வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது, நேரம் வரும் போது வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், இந்த வீடியோ அப்போலோ மருத்துவனையில்தான் எடுக்கபட்டதா என்ற சந்தேகத்தையும் அ.தி.மு.க தரப்பில் கிளப்பியுள்ளார்கள். 

தற்போது வெளியிடப்பட்ட வீடியோ ஆயிரம் கேள்விகளை எழுப்பியுள்ளது.  வீடியோ எப்போது எடுக்கப்பட்டது, தற்போது வெளியிடுவதற்கான காரணம் என்ன?  - சுப.வீரபாண்டியன் தந்தி டிவிக்கு பேட்டி அளித்தார்.

அ.தி.மு.கவை சேர்ந்த  கே.சி பழனிசாமி கூறும் போது போயஸ் கார்டனில் நடந்தது என்ன? ஜெயலலிதா ஏன் காப்பாற்றப்படவில்லை என்பதே எங்கள் குற்றச்சாட்டு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வெளியிடாதவர்கள் இப்போது வெளியிட்டது ஏன் என கேட்டு  உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள்  கட்சி  தலைவர்  தொல்.திருமாவளவன் கூறியதாவது:-

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ அப்போலோவா? போயஸ் இல்லமா? என்ற கேள்வி எழுகிறது. தேர்தலுக்காகத்தான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிடப்பட்டது. நாளை நடக்க உள்ள தேர்தலில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறினார்.

தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் தந்தி டிவிக்கு பேட்டியில்   வீடியோவை ஒரு வருடம் கழித்து, தேர்தல் நேரத்தில் வெளியிடுவதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை பெறுவது போன்று வெளியான வீடியோ முற்றிலும் பொய்யானது என  அதிமுக, முருகுமாறன் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.

மோசமான உடல்நிலையில் அனுமதிக்கப்பட்டதாக, மருத்துவமனை தெரிவித்த நிலையில் தற்போது வெளியான வீடியோவை, நம்ப முடியவில்லை.
வீடியோவின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்  என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா  தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.


Next Story