ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோவில் முரண்பாடுகள் திருநாவுக்கரசர் தகவல்
சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், திருநாவுக்கரசர் பேசினார்.
சென்னை,
‘‘ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ பதிவில் நிறைய முரண்பாடுகள் உள்ளன’’ என்று சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில், திருநாவுக்கரசர் பேசினார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கிறிஸ்துமஸ் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். சிறுபான்மைத்துறை தலைவர் அஸ்லம் பாஷா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக லயோலா பொறியியல் கல்லூரி இயக்குனர் பாதிரியார் அல்போன்ஸ் மாணிக்கம், தென்னிந்திய திருச்சபை பொருளாளர் பாதிரியார் சி.ராபர்ட் புரூஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவின்போது கிறிஸ்துமஸ் கேக் வெட்டப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏழை–எளியோருக்கு தையல் எந்திரங்கள், கண் கண்ணாடிகள், சேலைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர மிதிவண்டி உள்ளிட்டவற்றை திருநாவுக்கரசர் வழங்கினார்.
நிகழ்ச்சியின்போது சு.திருநாவுக்கரசர் பேசியதாவது:–
தமிழகத்தில் என்ன நடக்கிறது? என்பதை கணிக்கவே முடியவில்லை. ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலின் இறுதிகட்டத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. இது தேர்தலை முன்வைத்து தான் வெளியிடப்பட்டு இருக்கிறது. தேர்தலை மனதில் கொண்டு தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
வெளியிடப்பட்ட வீடியோவிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அந்த வீடியோ உண்மையிலேயே ஆஸ்பத்திரியில் வைத்து தான் எடுக்கப்பட்டதா? என்பன போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன. எனவே இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எது எப்படி இருந்தாலும் இந்த வீடியோவை மக்கள் நம்பி ஏமாற மாட்டார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவில் இந்த வீடியோ பதிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, தமிழ்நாடு ராகுல்காந்தி மக்கள் நல பாசறை தலைவர் மயிலை தரணி, மீனவர் அணி தலைவர் கஜநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் விழா நிறைவில் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story