ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் ‘சம்மன்’


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் ‘சம்மன்’
x
தினத்தந்தி 21 Dec 2017 10:45 PM GMT (Updated: 21 Dec 2017 7:36 PM GMT)

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க சசிகலாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்ப உள்ளது.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆணையத்தில் இதுவரை 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அவற்றின் அடிப்படையில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் ஆணையம் நேரடி விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 16 பேர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

அடுத்தகட்டமாக சசிகலா, அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப்ரெட்டி, துணைத்தலைவர் பிரீத்தா ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப ஆணையம் முடிவு செய்தது. அதன்படி அவர்களுக்கு சம்மன் நேற்று தயாரானது.

விசாரணை ஆணையத்தின் காலஅவகாசம் நாளை மறுநாளுடன் (24-ந் தேதி) முடிவடைகிறது. எனவே காலநீட்டிப்பு கேட்டு தமிழக அரசுக்கு ஏற்கனவே ஆணையம் கடிதம் எழுதி உள்ளது. அந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான உத்தரவு இன்று அல்லது நாளை வெளியாகலாம் என்று தெரிகிறது.

காலநீட்டிப்புக்கான உத்தரவு கிடைத்ததும் எந்த தேதியில் சசிகலா, பிரதாப்ரெட்டி, பிரீத்தா ரெட்டி ஆகியோரை ஆணையத்தில் ஆஜராக உத்தரவிடலாம் என்று நீதிபதி முடிவு செய்வார். அதன் அடிப்படையில் தேதி குறிப்பிட்டு உடனடியாக சம்மன் அனுப்ப ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Next Story